Last Updated : 13 Dec, 2020 04:09 PM

 

Published : 13 Dec 2020 04:09 PM
Last Updated : 13 Dec 2020 04:09 PM

நாளை முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: படம் | ஏஎன்ஐ.

மும்பை, பிடிஐ

வங்கிகளில் மிகப்பெரிய தொகையை அனுப்பப் பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறை நள்ளிரவு 12.30 மணி முதல் (திங்கள்கிழமை) தொடங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில், ஆர்டிஜிஎஸ் முறை 24 மணி நேரமும் செயல்படுவது டிசம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்திருந்தார். அது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போது ஆர்டிஜிஎஸ் செய்யும் நடைமுறை என்பது வங்கியின் வேலை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது. ஆனால், நாளை முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை கிடைக்கும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ஃட் சேவை ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆர்டிஜிஎஸ் சேவை நடைமுறைக்கு வந்தால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஆர்டிஜிஎஸ் சேவை 24 மணி நேரமும் செயல்படும் வசதி இருக்கும்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்குக் கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆர்டிஜிஎஸ் சேவை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியிலிருந்து அதே வங்கியின் பிற கிளைக்கும், மற்ற வங்கிக்கும் அனுப்பப் பயன்படுகிறது. நெஃப்ட் சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப ஆர்டிஜிஎஸ் சேவைக்குள் வர வேண்டும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், “ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி நள்ளிரவு 12.30 மணி முதல் இனிமேல் 24 மணி நேரமும் செயல்படும். ஐஎப்டிஏஎஸ் மற்றும் சேவைக்கூட்டாளிகள் மூலம் இது சாத்தியமானது.

உலக அளவில் இந்தியா உள்பட சில நாடுகளில் மட்டுமே ஆர்டிஜிஎஸ் வசதி 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இருக்கிறது. இந்த வசதியின் மூலம், மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் எந்நேரமும் செய்து, எளிதாக வர்த்தகம் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x