

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்ட கட்டணங்கள் குறித்து இன்று ஆய்வு நடத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது குறித்து திருப்தி தெரிவித்ததோடு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துக்கு பாராட்டும் தெரிவித்தார்.
பிரதமரின் லட்சியத்தின் ஒரு பகுதியாக, தற்சார்பு இந்தியா திட்டத்தை மே 2020-இல் நிதியமைச்சர் அறிவித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகைகள் 45 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மே 2020-இல் இருந்து, நிலுவைத் தொகைகள் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசால், குறிப்பாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை விரைந்து செலுத்துவதற்காக, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் முகமைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஏழு மாதங்களில், அதாவது நவம்பர் வரை, ரூ.21,000 கோடி அளவுக்கான கட்டணங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களாலும், மத்திய அரசின் முகமைகளாலும் செலுத்தப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதத்தில் மிக அதிக அளவில் ரூ. 5,100 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.4,100 கோடி கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவுக்காக நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.