Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

ஐசிஐசிஐ மோசடி வழக்கில் தீபக் கொச்சார், வேணுகோபால் நிறுவனங்களில் டிரைவர், தோட்டக்காரர்கள் இயக்குநர்களாக நியமனம்: அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபக் கொச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் தொடங்கிய நிறுவனங்களில் டிரைவர், தோட்டக்காரர்கள் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சந்தா கொச்சார் இருந்த போது வீடியோகான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. இதற்கு கையூட்டாக அவரது கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் ரூ.64 கோடி முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கடந்த மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:

தீபக் கொச்சார் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு, வீடியோகான் குழும நிறுவனங்களான எஸ்இபிஎல், ஐஆர்சிஎல், ஆர்சிபிஎல் மற்றும் விஐஎல் (வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) ஆகியவற்றின் இயக்குநர் குழு ஒப்புதல் பெறவில்லை. மேலும் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் தொடங்கிய நிறுவனங்களில் தோட்டக்காரர், அலுவலக உதவியாளர், கடை நிலை ஊழியர் உள்ளிட்டோர் டம்மி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேஷர்மல் நென்சுக்லால் காந்தி என்பவர் அகமத் நகரில் உள்ள வேணுகோபால் தூத் பங்களாவில் 1994-ம் ஆண்டு முதல் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் ஐஆர்சிஎல் (இந்தியன் ரெபரிஜிரேட்டர் லிமிடெட் நிறுவனம்) நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு ஊழியர் லட்சுமிகாந்த் சுதாகர் கடோர் என்பவர் தோட்டக்காரராக பணிபுரிகிறார். இவர் மெசர்ஸ் வீடியோகான் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை இயக்குநராக இருந்துள்ளார்.

இதேபோல் வசந்த் சேஷராவ் ககாடே என்பவர் வீடியோகான் நிறுவனத்தில் 1998-ம் ஆண்டில் இருந்து உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் வீடியோகான் குழுமத்தின் பல நிறுவனங்களில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீபக் கொச்சாரும் தனது ஊழியர்களை நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமித்துள்ளார். இவர் தனது சிறுவயது நண்பர் ஆனந்த் மோகன் தல்வானி, டிரைவராகவும் அட்டெண்டராகவும் பணிபுரிந்த சரத் சங்கர் மாத்ரே ஆகியோரை இயக்குநர்களாக நியமித்துள்ளார். மேற்கூறிய யாருக்கும் தாங்கள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதே தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x