Published : 17 Oct 2015 10:13 AM
Last Updated : 17 Oct 2015 10:13 AM

அழைப்பு தடைபட்டால் இழப்பீடு: டிராய் அறிவிப்பு

செல்போனில் பேசிக்கொண்டிருக் கும்போது தடைபட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒரு அழைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதன் மூலம் இணைப்பு துண்டிக்கப்பட்ட அழைப்புகள், ஏற்கப்படாத அழைப்புகளில் இடம்பெறும். இந்த இழப்பீடு நாள் ஒன்றுக்கு 3 முறை தடைப்பட்ட அழைப்புகளுக்கு பெறலாம். அதற்கு மேற்பட்ட அழைப்புகள் துண்டிக்கப்பட்டால் நுகர்வோர்கள் இந்த இழப்பீட்டை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழைப்பு தடைபட்டதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறித்து, அழைப்பு தடை ஆன நான்கு மணிநேரத்துக்குள் எஸ்.எம்.எஸ் அல்லது யூ.எஸ்.எஸ்.டி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

போஸ்ட் பெய்டு வாடிக்கையா ளர்களுக்கு, இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டது குறித்து அடுத்த மாத ரசீதில் தெளிவாகவும் தனிக் குறியீடுடனும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தவிர சேவையில் தரக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் கீழ் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் வரை இழப்பீடை வழங்கும்படியான விதிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் விதித்துள்ளது.

செல்போனில் அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது ஏற்படும் இணைப்பு துண்டிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சமீப காலமாக mygov இணையதளத்தில் புகார்கள் அதிக அளவில் குவிந்தன. அதன் பெயரில் இந்த உத்தரவு தற்போது வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x