

இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ குறியீடுகள் நேற்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டின.
சென்செக்ஸ் 347 புள்ளிகள் உயர்ந்து 45,459 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இது முந்தைய உச்சத்தை காட்டிலும் 0.77 சதவீத ஏற்றமாகும். அதேபோல் நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 13,355 புள்ளிகளாக புதிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகள் 3.28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. அதேசமயம் கோட்டக் வங்கி, நெஸ்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிகபட்சமாக 1.39 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன
நிஃப்டி குறியீட்டில் பொதுத்துறை வங்கி குறியீடு, பார்மா துறை, ஊடகத்துறை மற்றும் எப்எம்சிஜி துறை குறியீடுகள் 2.79 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டு உள்ளன. கரோனா பாதிப்பு நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு நடவடிக்கைகள் மற்றும் சரிவில் இருந்து மீண்டு வரும் வேகத்தை நிலையாக வைத்திருப்பதற்கான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் ஆகியவை பங்குச் சந்தை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் சந்தையை பாதிக்கக் கூடிய எதிர்மறை செய்திகள் தற்போது எதுவும் இல்லை என்பதும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் உற்சாகமாக ஈடுபட காரணமாக இருக்கிறது என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் உமேஷ் மேதா கூறியுள்ளார்.