

மத்திய அரசு கொண்டு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையானது இந்திய தொழில் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய வருவாய்த்துறை சிறப்புச் செயலர் ராஷ்மி வர்மா தெரிவித்தார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது ஊடகம் மற்றும் பொழுது போக்குத் துறைக்கான வரிவிதிப்பு குறித்த கருத்தரங்கில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அனேகமாக இது நவம்பர் மூன்றாம் வாரத்தில் தயாராகிவிடும். உடனடியாக இந்த வரைவு வரி விதிப்பு முறை பொதுமக்களின் பார்வைக்கு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே தொழில் துறையினருக்கான ஜிஎஸ்டி குறித்து மூன்று வகையான மாதிரிகளை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் நான்காம் பாகம் அதாவது வரி தாக்கல் (ரிட்டர்ன்ஸ்) குறித்த விவரம் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம்.
ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் அனைத்துத் துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சிக்கான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஊடகம் மற்றும் பொழுது போக்குத் துறைக்கும் பொருந்தும். நகராட்சி வரி மற்றும் அதன் உப வரி விதிப்புகள் இல்லாத சூழலை இது ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொழுதுபோக்கு, சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை ஒருங்கிணைந்து ஒரு முகமான வரியாக, தொல்லையற்ற வரி விதிப்பாக இது இருக்கும்.
இருப்பினும் உள்ளூர் நகராட்சிகள், பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் வருமானத்தை முற்றிலுமாக போக்கக்கூடாது என்பதற்காக அந்த நகராட்சி வரி விதிப்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மொத்த வரி விதிப்பில் 99 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அனைத்து தொழில் மற்றும் வர்த்தகத்துறையினருடன் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி குறித்து பிராந்திய அளவிலான கலந்துரையாடல் இம்மாதம் 26-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. பிறகு மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. தேசிய அளவிலான தொழில் கூட்டமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. அந்தந்த பிராந்தியங்களில் உள்ள சிறு, குறு தொழில், வர்த்தக அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி மாற்றத்துக்காக ஒரு சதவீத கூடுதல் வரி இரண்டு ஆண்டுகளுக்கு உற்பத்தித் துறையினருக்கு விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி சேவைத்துறைக்குக் கிடையாது என்றார்.
இப்போதைய வரி விதிப்பு முறையிலிருந்து ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதில் தொடக்கத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இது சட்டப்படி அமல்படுத்தப்படும்பட்சத்தில் அமலாக்கத்துக்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குத் தேவையான சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கித் தந்துள்ளதாக நிதி அமைச்சக சேவை வரித்துறை உறுப்பினர் வி. கிருஷ்ணன் கூறினார்.