Last Updated : 04 Dec, 2020 11:53 AM

 

Published : 04 Dec 2020 11:53 AM
Last Updated : 04 Dec 2020 11:53 AM

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸ் 7.5 ஆகக் குறையும்; 2-வது பகுதியில் சாதகமான பொருளாதார வளர்ச்சி; வட்டி வீதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி தகவல்

கடனுக்கான வட்டிவீதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் தொடர்ந்து 3-வது முறையாக நிலையாகவே வைத்து ரிசர்வ் வங்கியின் நிதிக்குழுக் கொள்கைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் 2-வது பாதியில் பொருளாதார வளர்ச்சி ஓரளவு சாதகமாக இருக்கும் என்றாலும், ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடர்கிறது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேவைப்பட்டால் வட்டிவீதம் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும், 3-வது நிதிக்குழுக் கொள்கைக் கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் சக்தி காந்ததாஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் மாற்றமில்லாமல் தொடரட்டும். அதாவது தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடரட்டும் என்று நிதிக்கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவே தொடரும்.

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரெப்போ ரேட் வீதத்தை மார்ச் மாதத்திலிருந்து 115 புள்ளிகளைக் குறைத்துள்ளோம்.

நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்தோம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இதற்கு முன் மைனஸ் 9.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனக் கணித்திருந்தோம்.

3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதமும், கடைசிக் காலாண்டில் 0.7 சதவீதமும் வளர்ச்சி அடையக்கூடும். நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்''.

இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x