

கடந்த 40 ஆண்டுகளாக நேபாளத்துக்கு எரிபொருள் அனுப்பி வருகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். தற்போது நேபாளத்துக்கு நீண்ட கால அடிப்படையில் எரிபொருள் அனுப்ப சீனா முடிவெடுத்துள்ளது. இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.
நேபாளத்துக்கு இந்தியா கடந்த 40 ஆண்டுகளாக பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏகபோக உரிமையை தன் வசம் வைத்திருந்தது. ஆனால் தற்போது நேபாளம் சீனாவிடம் வைத்த கோரிக்கையை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறும்போது, “நேபாளத்துக்கு எரிபொருள் சப்ளை செய்ய சீனா முடிவெடுத்துள்ளது. நேபாளம் தனது எரிபொருள் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக இது வழங்கப்படுகிறது.
இது குறித்து பேச சீன அதிகாரிகளை நேபாள பணிக்குழுவினர் சந்தித்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி குறித்து அவர்கள் பேசியுள்ளனர்” என்றார்.
இது பற்றி நேபாள அரசுக்கு நெருக்கமான உயர்மட்ட அதிகாரிகள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, ஆளும் யு.சி.பி.என். (மாவோயிஸ்ட்) கட்சியின் துணைத் தலைவர் நாராயண் காஜி ஷ்ரேஸ்தா இந்த மாத தொடக்கத்தில் சீனா சென்றிருந்த போது பெட்ரோலிய பொருட்கள் சப்ளை குறித்த பேச்சுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில் கடந்த புதனன்று நேபாள் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சீனாவின் நேஷனல் யுனைடெட் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றிடையே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறுகிய கால பெட்ரோலியம் சப்ளைக்காக இருந்தாலும் இன்னும் ஒன்றரை மாதத்தில் முழு அளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்மாண்டுவில் பணியாற்றும் பத்திரிகையாளர் சந்தோஷ் கிமைரிடம் இது பற்றி கேட்ட போது, எரிசக்தி பாதுகாப்பில் சீனாவுடனான நேபாளத்தின் இந்த புதிய ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான நகர்த்தலாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. நேபாளம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் முத்தரப்பு உறவுகள் வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது என்பதையே அறிவுறுத்துகிறது. மேலும் சீனாவிடத்தில் ஒரு சமச்சீரான, நடுநிலையான அயலுறவுக் கொள்கை இருக்கிறது என்று நேபாளம் நம்புகிறது என்றார்.