இ-சஞ்சீவனி; தொலைதூர மருத்துவ சேவை: தமிழகம் தொடர்ந்து முதலிடம்

இ-சஞ்சீவனி; தொலைதூர மருத்துவ சேவை: தமிழகம் தொடர்ந்து முதலிடம்
Updated on
1 min read

9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ள இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளம், 9 லட்சம் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை வழங்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது. நாட்டிலேயே அதிக ஆலோசனைகள் வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2,90,770 ஆலோசனைகள் இந்த தளத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 2,44,211, கேரளாவில் 60,401, மத்திய பிரதேசத்தில் 57,569, குஜராத்தில் 52,571, ஹிமாச்சல பிரதேசத்தில் 48,187, ஆந்திரப் பிரதேசத்தில் 37,681, உத்தராகண்டில் 29,146, கர்நாடகாவில் 26,906 மற்றும் மகாராஷ்டிராவில் 10,903 தொலைதூர ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

இணையதளம் வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் இந்தத் திட்டம், நோயாளிகளையும் தொலைதூரத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களையும் காணொலி வாயிலாக இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு மருத்துவ சேவை தடைபடாமல் கிடைக்கும் நோக்கத்தில், 28 மாநிலங்கள் இந்த இ-சஞ்சீவனி தளத்தில் இணைந்துள்ளன. தொலைதூர மருத்துவ ஆலோசனை சேவையை நீண்டகாலம் வழங்குவதற்கான வழிமுறைகளை இந்த மாநிலங்கள் வகுத்து வருகின்றன.

தமிழகம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள், இணைய தள வசதி அல்லாத ஏழை நோயாளிகளுக்கும் இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in