

மும்பை, அகமதாபாத் நகரங்களை இணைக்கும் பிரம்மாண்ட புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான ரூ.24 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசிய அதிவிரைவு ரயில்வே நிறுவனத்துக்கும் எல் அண்ட் டி உட்கட்டமைப்பு நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வரலாற்றில் மிகப்பெரிய மதிப்பிலான ஒப்பந்தமாக கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் தேசிய அதிவேக ரயில் நிறுவனம் மும்பை - அகமதாபாத் நகரங்களை இணைக்கும் ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரயில் திட்டத்துக்கான ஏலத்தை அறிவித்தது. இந்த புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த 7 நிறுவனங்கள் தேர்வாயின.
இதில் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது. அரசு வழங்கும் ஒப்பந்தங்களில் வரலாற்றில் முதல் முறையாக பெரிய மதிப்பிலான ஒப்பந்தமாக இது உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 508 கி.மீ. தொலைவிலான இந்த புல்லட் ரயில் திட்டத்தில், 325 கி.மீ. பகுதி குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தைதான் எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எல் அண்ட் டி நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை கையெழுத்தானது. இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டதாக எல் அண்ட் டி நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் தூதரக அதிகாரி சதோஷி சுசூகி கூறுகையில் இந்த பிரம்மாண்ட திட்டம் மூலம் ஜப்பான் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவது மட்டுமல்லாமல் இதன் வழித்தடத்தில் மிகப்பெரிய நகர வளர்ச்சியையும் கொண்டுவரும் என்றார்.