

அமேசான் நிறுவனம் டெலிவரி செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது குறித்த தகவலை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதை தெரிவிக்க அமேசான் தவறிவிட்டது. இதற்காக அமேசான் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘‘இந்த அபராதம் போதாது. அந்நிறுவனத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்க வேண்டும்’’ என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, சிஏஐடி அமைப்பின் தலைவர் பி.சி.பார்தியா மற்றும் செயலர் பிரவீண் கந்தேல்வால் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவின் விதிமுறைகளை மீறும் போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, அந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பின் அளவுக்கு இணையாக இருக்க வேண்டும். அவ்விதம் அபராதம் விதிப்பது பிற ஆன்லைன் நிறுவனங்களுக்கு பாடமாக அமையும்” என்று கூறியுள்ளனர்.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக அமேசான் அளித்த விவரம் திருப்திகரமாக இல்லை எனக் கூறி நவம்பர் 19-ம் தேதி அமைச்சகம் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
சட்டப்படி ஒவ்வொரு இயக்குநருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிளிப்கார்ட் மீது இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை.
சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக ஒரு வாரம் தடை விதிக்க வேண்டும். இரண்டாவது முறை 15 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மீறினால், அதை செயல்படுத்தும் வரை அந்நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று கந்தேவால் குறிப்பிட்டுள்ளார்.