

கபே காபிடே நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 1,150 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்திருக்கிறது. நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான ஐபிஓகளில் மிகப்பெரியது இதுவாகும். ஒரு பங்கின் விலை பட்டை ரூ.316 முதல் 328 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 14-ம் தேதி பொதுப்பங்கு வெளியீடு தொடங்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய காபி தொடர் நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனத்தில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களாக கேகேஆர், ஸ்டான்சார்ட் பிஇ, நியூ சில்க் ரூட் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இதில் கேகேஆர் நிறுவனம் 3.43 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. தவிர இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலக்கேணி 1.77 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.
நிறுவன பணியாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறன. நிறுவனத்தின் நிறுவனரான விஜி சித்தார்த்தா வசம் 54.78 சதவீத பங்குகள் உள்ளன. மொத்தமான நிறுவனர்களின் பங்கு 92.74 சதவீதமாக இருக்கிறது.
காபிடே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக காபிடே குளோபல் செயல்பட்டு வருகிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,154 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் மொத்த வருமானம் இருந்தது. செயல்பாட்டு லாபம் 189 கோடி ரூபாய் ஆகும்.
1996-ம் ஆண்டு பெங்களூருவில் முதல் காபிடே தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட கடைகளும், ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 14 கடைகளும் உள்ளன. காபி சந்தை ஆண்டுக்கு 20 சதவீதம் வளர்ந்து வருகிறது.