Published : 20 Nov 2020 08:26 PM
Last Updated : 20 Nov 2020 08:26 PM

சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமையுங்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கட்டுமான சங்கம் கோரிக்கை

சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக இணைந்து விலையை நிர்ணயிப்பதைத் தடுக்க வேண்டும். ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதன் மூலம் சிமென்ட் உற்பத்தியாளர்கள் முறையற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்று இந்திய கட்டுமான சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கட்டுமான சங்கத்தின் (பிஏஐ) தலைவர் எம்.யு.மோகன் இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:

''ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதன் மூலம் சிமென்ட் உற்பத்தியாளர்கள் முறையற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். சிமென்ட் விலையை இவர்கள் கூட்டு சேர்ந்து நிர்ணயிப்பதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு சாதாரண மக்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய போட்டி ஒழுங்குமுறை குழு (சிசிஐ), எண்29/2010-ல் பிஏஐ மனுத்தாக்கல் செய்தது. அதை ஆராய்ந்த சிசிஐ ஜூன் 20, 2012-ல் அளித்த பரிந்துரையில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டு சேர்ந்து விலையை நிர்ணயிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிஐ அமைப்பு 10 சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 6,30,732 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சிமென்ட் உற்பத்தியாளர்கள் மேல்முறையீடு செய்தபோது அதை விசாரித்த தேசிய தீர்ப்பாயம் ஜூலை 25,2018-ல் வழங்கிய தீர்ப்பில் அபராதம் விதித்தது சரி எனக் குறிப்பிட்டது. தற்போது சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் அக்டோபர் 5, 2018-ல் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு சிமென்ட் துறையின் செயல்பாடு குறித்து 95-வது அறிக்கை மாநிலங்களவையில் பிப்ரவரி 24, 2011இல் தாக்கல் செய்யப்பட்டது. குழு அப்போதே ஒழுங்குமுறை அமைப்பு அமைக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தது. சிமென்ட் நிறுவனங்கள் தங்கள் ஆதாயத்துக்காக விலையை அடிக்கடி உயர்த்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நியாயமான விலை, சில்லறை விற்பனை விலை உள்ளிட்டவற்றை மிகவும் தெளிவாக நிர்ணயிப்பதுதான் பொதுமக்களுக்குப் பலன் அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிமென்ட் விலை அடிக்கடி உயர்வது, விலையில் ஸ்திரமற்ற சூழல் ஆகியன கட்டுமானத்துறையை வெகுவாகப் பாதிக்கும் என்றும், இதற்குக் கட்டாயம் ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்க வேண்டும் எனறும் வலியுறுத்தியிருந்தது. செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்குவது, சிமென்ட் உற்பத்தியை முழு அளவு உற்பத்தி செய்யாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் சிமென்ட் நிறுவனங்கள் ஈடுபடுவதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருமுக மற்றும் கட்டுப்படுத்தப்பட் வர்த்தக நடைமுறை ஆணையம் நவம்பர் 28,2006-லேயே சிமென்ட் நிறுவனங்கள் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பின்கீழ் வர வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தது. சிமென்ட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலையை நிர்ணயிப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 18,2020 அன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி பதிலில் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி செய்த அளவு அவற்றின் முழு உற்பத்தித் திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்ததாக பதில் அளிக்கப்பட்டது. இதிலிருந்தே சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்களது முழு உற்பத்தித் திறன் அளவுக்கு சிமென்ட்டை உற்பத்தி செய்யாமல் கூட்டு சேர்ந்து விலையேற்றத்துக்கு வழிவகுப்பது தெரியவரும்.

சிமென்ட் துறையானது 1991-ம்ஆண்டு முதல் பொருளாதார தாராள மயமாக்கத்தால் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத துறையாக மாறியது. சந்தையின் தேவைக்கேற்ப புதிய ஆலைகள் அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலின்படி, ஏற்கெனவே தொலைத் தொடர்புத் துறை, ரியல் எஸ்டேட் துறைகளுக்கு உள்ளதைப்போல சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தங்களுக்குக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கட்டுமான அமைப்பானது, இத்துறையின் முன்னோடி சங்கமாகும். இது 1941-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு இதில் 20 ஆயிரம்பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு நாடு முழுவதும் 200 கிளைகள் உள்ளன. கட்டுமானத் துறையில் மேம்பட்ட சூழலை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். கட்டுமானத் துறை மிகப் பெரும் நெருக்கடியை சந்தித்துவரும் வேளையில் இதுபோன்ற கொள்கை முடிவுகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இதனால் பொருளாதாரமும் வளரும்.

கட்டமைப்பு, வீடு கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இத்தொழிலுக்கு பிரதான மூலப்பொருளே சிமென்ட்தான். இருப்பினும் உற்பத்தியாளர்கள் கூட்டு சேர்ந்து பெருமளவு லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக கட்டுமானத் துறைதான் மிக அதிக அளவிலான வேலை வாய்ப்பை வழங்குகிறது. இத்தொழிலுடன் இணைந்து 400க்கும் மேற்பட்ட தொழில்கள் இயங்குகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 9 சதவீதமாகும். மத்திய அரசின் பெரும் திட்டப் பணியில் இத்துறைக்கான ஒதுக்கீடு 60 சதவீதமாகும். இவற்றை கருத்தில் கொண்டு இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது ஒன்றே சிறந்த தீர்வாக அமையும்''.

இவ்வாறு இந்திய கட்டுமான சங்கத்தின் (பிஏஐ) தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x