

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பிரீமியம் வசூல் 10 சதவீதம் குறைந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் தனிப்பட்ட நபர்கள் செலுத்தும் புதிய பாலிசி பிரீமியம் தொகை குறைந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 8,890 கோடி ரூபாய் பிரீமியம் வசூல் ஆனது. இப்போது 10 சதவீதம் குறைந்து 8,115 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி இருக்கிறது.
ஆனால் அதே சமயம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் 7,322 கோடி ரூபாயாக இருந்த பிரீமியம் வசூல் இப்போது 8,422 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் யூலிப் பாலிசிகளின் விற்பனை நன்றாக இருக்கிறது. குறிப்பாக வங்கிகளுடன் இணைந்து செயல்படும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விற்பனை நன்றாக இருக்கிறது. புதிய விதிமுறைகளின் படி அனைத்து பாலிசிகளையும் மீண்டும் ஒழுங்குமுறை ஆணையத் திடம் சமர்பித்த பிறகுதான் விற்க முடியும். எல்ஐசியின் யூலிப் பாலிசி கடந்த ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது.
ஆனால் ஒட்டுமொத்த (தனிநபர் மற்றும் குழும) பிரீமிய வசூலில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது.