Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

பொருளாதார பாதிப்பு எதிரொலி: பி.எப். பதிவில் இருந்து வெளியேறிய 30,800 நிறுவனங்கள்

அக்டோபர் மாதத்தில் பணியாளர் சேமநல நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) பதிவு பட்டியலில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. இதன் மூலம் கரோனோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நிறுவனங்கள் எதிர்பார்த்த வேகத்தில் மீண்டு வரவில்லை என்பது தெரிகிறது.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி இபிஎஃப்ஓ நிறுவனத்தில் 5,34,869 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் அக்டோபர் மாதத்தில் 30,800 நிறுவனங்கள் வெளியேறி உள்ளன. தற்போது 5,04,044 நிறுவனங்கள் மட்டுமே பிஎஃப் நடைமுறை பட்டியலில் உள்ளன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் நிறுவனங்கள் தொழில் நடத்துவதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டன. பெரும்பாலோனோர் வேலை இழப்பை சந்தித்தனர். ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்ட பின்பு பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன.

நிறுவனங்களும் அவற்றின் தொழில் நடவடிக்கைகளும் பழைய நிலைக்கு விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் பிஎஃப் நடைமுறையில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும் பிஎஃப் கணக்குதாரர்களின் எண்ணிக்கையும் அக்டோபர் மாதத்தில் 18 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 4.768 கோடியாக இருந்த பிஎஃப் கணக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 4.582 கோடியாக குறைந்துள்ளது.

இபிஎஃப்ஓ பதிவு பட்டியலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மீண்டும் எண்ணிக்கையில் முன்னேற்றம் தொடர்ந்து காணப்பட்டது. செப்டம்பர் மாதம் வரை காணப்பட்ட இந்த முன்னேற்றம் அக்டோபரில் திடீரென்று சரிவைச் சந்தித்துள்ளது. நிறுவனங்கள் பி எஃப் தொகைக்கு செலவு செய்ய முடியாத நிலை காரணமாக வெளியேறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சரிவு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சந்தையில் தேவை குறைந்துள்ளதன் காரணமாக ஏற்பட்டிருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்துறை சந்தித்துள்ள சவால்களை தெளிவாக காட்டுவதாகவும் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x