Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

சீன தயாரிப்பு புறக்கணிப்பு எதிரொலி: சீன வர்த்தகர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம்

புதுடெல்லி

சீன தயாரிப்புகளை முற்றிலுமாக இந்திய வர்த்தகர்கள் புறக் கணித்ததால், தீபாவளி விற்பனையில் அந்நாட்டு வர்த்தகர் களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடியை தொட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயிரிழந்தனர்.

கல்வான் பள்ளத்தாக்கு சண்டையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. சீனாவின் அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், அந்நாட்டு தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி), தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. அதன்படி, சீன தயாரிப்புகளை வாங்குவதை இந்திய வர்த்தகர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின்போது சீன தயாரிப்பு களை இந்திய வர்த்தகர்கள் தவிர்த்ததால் அந்நாட்டு வர்த்தகர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி சிஏஐடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முக்கிய வர்த்தகப் பகுதிகளாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, நாக்பூர், ராய்ப்பூர், புவனேஸ்வர், ராஞ்சி, போபால், லக்னோ, கான்பூர், நொய்டா, ஜம்மு, அகமதாபாத், சூரத், கொச்சி, ஜெய்ப்பூர், சண்டிகர் ஆகிய 20 நகரங்கள் கருதப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையின்போது இந்த நகரங்களில் நடந்த வர்த்தகம் ரூ.72 ஆயிரம் கோடியாகும். சீன தயாரிப்புகளை புறக்கணித்ததால் அந்நாட்டு வர்த்தகர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் பொருட்கள் (எப்எம்சிஜி), பொம்மைகள், மின்னணு பொருட்கள், சமையலறை சாதனங்கள், பரிசுப் பொருட்கள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள், தங்கம் மற்றும் ஜூவல்லரி, காலணிகள், கைக்கடிகாரங்கள், பர்னிச்சர், கார்மென்ட், ஃபேஷன் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கியுள்ளனர்.

கரோனா ஊரடங்குக்கு பிறகு வந்த பண்டிகையில் மிகச் சிறப்பாக விற்பனை எட்டப்பட்டதால் வர்த்தகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதிர்வரும் காலங்களிலும் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x