Last Updated : 11 Oct, 2015 12:04 PM

 

Published : 11 Oct 2015 12:04 PM
Last Updated : 11 Oct 2015 12:04 PM

கடன் மோசடி: விஜய் மல்லையா வீட்டில் சிபிஐ சோதனை

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. மும்பை, கோவா, பெங்களூரு வீடுகளில் இந்த சோதனை நடந்தது. நிறுவனம் மோசமாக செயல்பட்டு வரும் சூழ்லையிலும் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய 950 கோடி ரூபாய் கடனுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையா, கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரகுநாதன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் உயரதிகாரி ஒருவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல பொதுத்துறை வங்கிகள் குழுவாக கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த கடன் பிரச்சினையில் இருக்கும் போது, அதை தவிரவும் ஐடிபிஐ வங்கி கடன் கொடுத்திருக்கிறது. தவிர கடன் கொடுக்கப்பட்டதில் விதிமுறைகள் சரியாக பின்பற்றவில்லை என்றும் சிபிஐ தெரிவிக்கிறது. இந்த வழக்கில் விஜய் மல்லையா விரைவில் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் கிங்பிஷர் இதுதொடர்பாக இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் குறித்து கிங்பிஷர் மற்றும் ஐடிபிஐ அதிகாரிகளிடம் முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளது. கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் உரிய பதிலையும் காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் வழங்கியதற்கான காரணத்தை வங்கி விளக்க வேண்டும். ஏனெனில் கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்க வேண்டாம் என வங்கியின் குழு பரிந்துரை செய்ததை எதிர்த்து இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 அக்டோபர் முதல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்படவில்லை. 17 வங்கிகள் ஒன்றாக சேர்ந்து 7000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது. இதில் எஸ்பிஐ 1,600 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x