Published : 08 May 2014 10:00 AM
Last Updated : 08 May 2014 10:00 AM

தொழிலில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்

இன்றைய காலகட்டத்தில் தொழில் செய்பவர்கள் பலருக்கும் தங்கள் தொழிலுக்காகவோ அல்லது சொந்த தேவைக்காகவோ கடன் தேவைப்படுகிறது. மேலும், இன்று நாம் சிறிய குடும்பங்களில் வாழ்வதால், துரதிருஷ்டவசமாக நாம் உயிரிழந்தால் நமது குடும்பத்தினருக்கும் நிதி சார்ந்த உதவி தேவைப்படுகிறது.

அந்த நிதி சார்ந்த உதவியை நாம் டேர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) மூலமாகப் பெறலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை என்று எடுத்துக் கொள்

வோம். அதேபோல் உங்களுக்கு வீட்டுக்கடன் சுமார் 25 லட்சம் தேவைப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். இவை இரண்டையும் பெறுவதற்கு உங்களின் வருமான வரி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியமாகிறது.

ஆனால் நம் நாட்டில் சிறு தொழில் புரிபவர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்வதே கிடையாது. அவ்வாறு தாக்கல் செய்தாலும் மிகக் குறைந்த அளவு வருமானத்தையே தாக்கல் செய்கிறார்கள். மீதி எல்லாம் கருப்புப் பணமாக மாறி விடுகிறது. ஆகையால் அவர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடனோ அல்லது தங்களின் உயிரின் மதிப்பிற்கு ஏற்றாற் போல் டேர்ம் இன்ஷூரன்ஸோ கிடைக்காமல் போய் விடுகிறது.

தேவையில்லாமல் அவர்கள் வருமான வரித் துறைக்கு பயந்து கொண்டே இருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வுதான் – தொழில் கணக்குகளை முறைப்படி எழுதி ஒழுங்காக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழில் அதிபரும் மற்றும் தொழிலில் வேலை பார்க்கும் அவரது குடும்பத்தினரும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களின் தொழில் சார்ந்த செலவுகள் அனைத்தையும் செலவு கணக்கில் கொண்டும் வரலாம். குடும்பத்தில் இருந்து வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் வாங்கும் சம்பளத்திற்கு ரூ.2 லட்சம் வரை வருமான வரி கிடையாது. அதற்கு மேல் ரூ.1 லட்சத்திற்கு வருமான வரி சேமிப்பு செய்தால் 80C பிரிவின் கீழ் வரி செலுத்த வேண்டாம். இதற்கு மேலும் பல பயன்களை நிறுவனம் மூலமாக வேலை செய்யும் குடும்பத்தினருக்கு செய்து கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை நிறுவனச் செலவிலேயே வேலை பார்க்கும் அனைவருக்கும் எடுத்துக் கொடுக்கலாம். இவ்வாறாக உங்களுக்கு வரும் வருமானத்தை கறுப்புப் பணமாக மாற்றாமல், உண்மையான கணக்குகளை எழுதி நிர்வகிப்பதன் மூலம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதே சமயத்தில் வருமான வரித்துறையை கண்டு நீங்கள் பயப்படவும் தேவையில்லை; ஊழியர்களின் நன்மதிப்பையும் பெற முடியும்.

தொழிலில் வரும் உண்மையான லாபத்தை வருமான வரித்துறைக்கு காண்பிக்கும் பொழுது, உங்களுக்கு வங்கிகளிலிருந்து தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் கிடைப்பதும் எளிதாக இருக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணம் இருந்தால், வரவு செலவு கணக்குளை ஒழுங்காக வைத்துக் கொள்வதும், அரசாங்கம் சார்ந்த அனைத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதும் மிகவும் அவசியமாகிறது.

புரப்பொரைட்டர் அல்லாத பிற அமைப்புகள் மூலமாக தொழில் செய்யும்பொழுது தொழிலுக்கும் அதை நடத்துபவர்களுக்கும் உண்டான இடைவெளி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப், எல்.எல்.பி, பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் போன்ற அமைப்புகள் மூலம் தொழில் செய்யும்பொழுது, நிறுவனம் ஒரு தனி மனிதனைப் போல் ஆகிவிடுகிறது.

ஆகவே அதை நிர்வகிப்பவர்களின் வரவு செலவுகளும், நிறுவனத்தின் வரவு செலவுகளும் தனித் தனியாக இருப்பது மிகமிக அவசியம். இவ்வகை அமைப்புகளில் வேலை செய்பவர்கள் தங்களுக்குள்ள சம்பளத்தையும் பிற பலன்களையும் மேனேஜ்மெண்ட் டீமூடன் ஒப்புக்கொண்டபடி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சென்று நிறுவனத்திடமிருந்து கடன் போன்றவை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்ததாகும். இவ்வகை அமைப்புகளில் நிறுவனத்திற்கென்று தனியாக வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அதே போல், அதில் வேலை செய்யும் தனி நபர்கள் தத்தமக்கு தனியாக வரி தாக்கல் செய்ய வேண்டும்.

பல நேரங்களில் இது போன்ற நிறுவனங்களை நடத்தும் முக்கிய நபர்கள் நிறுவனத்திலிருந்து தங்களின் வேறு தேவைகளுக்காக தொகைகளை திசை திருப்புவார்கள். இது போன்ற நடவடிக்கைகளால்தான் பல நிறுவனங்கள் கவிழ்வதும் முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பதும் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் அல்லது நிறுவனத்தை நடத்துபவர்கள் மிகவும் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் இன்றைய தேதியில், அரசாங்கம் சார்ந்த அல்லது சுய கண்காணிப்பு அமைப்புகளுக்கு உட்பட்டு, சட்டதிட்டங்களை கடைப்பிடித்து தொழில்களை நடத்துவது மிகவும் அவசியமாகிறது. பொதுவான அமைப்புகள் என்று பார்த்தால் வருமான வரித் துறை மற்றும் எம்.சி.ஏ (MCA - Ministry of Corporate Affairs) பல நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு அமைப்பாக இருக்கின்றன. அவற்றைத் தவிர ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. உதாரணத்திற்கு மருந்துத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மருந்துத் துறை (Drugs Control Department) கண்காணிப்பின் கீழ் வருவார்கள்.

உணவகங்கள் நடத்துபவர்கள் உணவுத்துறையின் கீழ் (Department of Food Safety) வருவார்கள். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆர்.பி.ஐ-யின் (RBI – Reserve Bank of India) கட்டுப்பாட்டில் வருகின்றன. இன்று சிறு தொழில்கள் ஆகட்டும் அல்லது பெரிய தொழிலாகட்டும் – கட்டுப்பாட்டு ஆணையங்களிடம் உள்ள ரிஸ்க் (Regulatory Risk) என்பது அதிகமாகி விட்டது. ஆகவே நாம் நமது தொழில் நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டும் என்று எண்ணினால், கண்காணிப்பு ஆணையங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது அவசியமாகும்.

தொழில் ஆரம்பிக்கும் பல இளைஞர்கள் இவற்றையெல்லாம் நினைத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. இவற்றையே நமக்கு சாதகமாக்கிக் கொள்வது குறித்து இனி வரும் வாரத்தில் பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்- prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x