Last Updated : 15 Nov, 2020 01:25 PM

 

Published : 15 Nov 2020 01:25 PM
Last Updated : 15 Nov 2020 01:25 PM

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம்: ஆக்ஸ்போர்ட் ஆய்வு நிறுவனம் தகவல்


இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம்.ரிசர்வ் வங்கி விரைவில் வட்டிவீதக் குறைப்பை நிறுத்திக்கொள்ளும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்தியஅரசு கடந்த மார்ச் 22-ம் தேதி நாடுமுழுவதும் லாக்டவுனைக் கொண்டுவந்தது. இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகளால் நாட்டில் தொழில், வர்த்தகம், நடுத்தர, குறு, மற்றம் சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.90 சதவீதமாகக் குறைந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டு ஜிடிபி குறித்த அறிக்கை இன்னும் அரசு வெளியிடவில்லை. இருப்பினும் ஆய்வுகளின்டி மைனஸ் 8.6 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மைனஸ் 9 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆனால், கடந்த 3 நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “ லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப்பின், நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீட்சி அடைந்து வருகிது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெற்று வருகிறது. விரைவில் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கையில் வட்டி வீதக் குறைப்பு குறித்த அறிவிப்பை நிறுத்திக் கொள்ளும்.
நடப்பு நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேலாக இருக்கும். டிசம்பர் மாதத்துடன் வட்டிவீதக் குறைப்பை ரிசர்வ் வங்கி நிறுத்திவைக்கும்.

அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்து கரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலையை எட்டிவிட்டது. பெட்ரோல்,டீசல் விலை தவிர்த்து, மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் விலை அதிகரித்துள்ளது. கடைசிக் காலாண்டில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும், 2021-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்கறிகள், முட்டை ஆகியவற்றின் விலையால் சில்லரை பணவீக்கம் கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு அக்டோபர் 7.61 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி விதித்த அளவுக்கும் அதிகமான நிலையில்தான் சில்லரைப் பணவீக்கம் இருக்கிறது. கடந்த செப்டம்பரில் சில்லரை பணவீக்கம் 7.27 சதவீதம் இருந்தது.

பொருளாதாரத்தின் அடிமட்ட அளவில் உள்ள புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யும்போது, பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட வேகமாக மீட்சி பெற்று வருகிறது. ஆதலால் விரைவில் வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி நிறுத்திக்கொள்ளும்” இவ்வாறு ஆக்ஸ்போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூடிஸ் முதலீ்ட்டாளர்கள் சேவை நிறுவனம் 2020ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை மைனஸ் 8.9 சதவீதமாக திருத்தியுள்ளது. இதற்கு முன் மைனஸ் 9.9 ஆக வைத்திருந்த நிலையில், பொருளாதாரம் வேகமாக மீட்சி பெற்றுவருவதால் கணிப்பை மாற்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x