Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் பாரத் 3.0’ திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.2.65 லட்சம் கோடிக்கு ஊக்கச் சலுகைகள் அறிவிப்பு

டெல்லியில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்குர். படம்: பிடிஐ

புதுடெல்லி

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க மேலும் பல்வேறு ஊக்கச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுகட்டும் வகையில் ரூ.2.65 லட்சம் கோடிக்கு ஆத்மநிர்பார் பாரத் 3.0 திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, மாத ஊதியம் ரூ.15 ஆயிரமாக இருப்பின் அவர்களுக்கான இபிஎப் தொகையை 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும். அடுத்ததாக அவசர கால கிரெடிட் லைன் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்) மார்ச் 31, 2021 வரை அளிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு இந்த கடன் உத்தரவாத சலுகை அளிக்கப்படும். அத்துடன் கடனுக்கு ஓராண்டுக்கு சலுகை அளிக்கப்படும்.

இதில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கச் சலுகை (பிஎல்ஐ) அடங்கும். ரூ.1.46 லட்சம் கோடி உற்பத்தி துறைக்கு அளிக்கப்படும். இச்சலுகை 10 துறைகளுக்கு அதிலும் குறிப்பாக செல்போன் உற்பத்தி, எலெக்ட்ரானிக் உதிரிபாக உற்பத்தி, பார்மா உள்ளிட்ட துறைகளுக்கு அளிக்கப்படும். இந்த சலுகையானது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு உள்நாட்டில் வேலை வாய்ப்பையும் உருவாக்க உதவும்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு முன்வைப்பு தொகை (இஎம்டி) செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும். ஒப்பந்த பணிக்கான காப்பீட்டு தொகை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. டெண்டர்களுக்கு முன்வைப்பு தொகை செலுத்துவது அவசியமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு அறிவித்த ஊக்கச் சலுகை அளவு ரூ.29.87 லட்சம் கோடியாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 15 சதவீதம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

முறை சாரா துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக இத்துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்துள்ளார். இது கட்டுமானம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பதாக அமையும். அத்துடன் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க உதவும். வேளாண் துறைக்கு பல்வேறு சலுகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ரூ.2 கோடி வரையிலான வீடுகளை வாங்குவதற்கு 20 சதவீதம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். முதலில் வீடு வாங்குவோருக்கு அளிக்கப்படும் இந்த சலுகையால் அடுத்த காலாண்டில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ரியல் எஸ்டேட் துறையில் தெரியும் என இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சலுகையானது ஜூன் 30, 2021 வரை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு துறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு ரூ.65 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்படும். இதில் உரத்துக்கான மானியமும் அடங்கும். 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் அட்டை அளிக்கப்படும். இதற்காக ரூ.1.4 லட்சம் கோடி தொகை அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கரீப் கல்யாண் ரோஸ்கார் யோஜனா திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி கடன் சலுகையாக எக்ஸிம் வங்கி வாயிலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டதை விட ரூ.10,200 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மூலதன மற்றும் தொழில் விரிவாக்க செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.900 கோடி கோவிட் சுரக் ஷா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசி தயாரிப்பு பணிகளுக்கு செலவிடப்படும்.

பகுதியளவு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.27 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) ரூ.1.18 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.31 ஆயிரம் கோடி கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

அவசர கால கடன் ஒதுக்கீடு உத்தரவாத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.2.05 லட்சம் கோடி 61 லட்சம் கடனாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இதில் ரூ.1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் 28 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 68.6 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 2020-21ம் நிதி ஆண்டின் 3-ம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் மீட்சியடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

பொருளாதாரம் மீட்சியடைவதன் அடையாளமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் தொகை அதிகரித்துள்ளது. வங்கி கடன், அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்கு முன்பு கடந்த மே மாதம் மத்திய அரசு இதுபோன்ற ஊக்க சலுகைகளை அறிவித்தது.

கரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் மைனஸ் 23.9 என்ற நிலைக்கு சரிந்துள்ளது. இது மார்ச் 2021-ல் மைனஸ் 10 என்ற நிலைக்கு மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மூடி’ஸ் அளித்த தரச்சான்று

சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மைனஸ் 9.6 ஆக இருக்கும் என மூடி’ஸ் கணித்திருந்தது. அது தற்போது மைனஸ் 8.9 என திருத்தியமைத்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். இதேபோல 2021-ல் வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டதை தற்போது திருத்தி 8.6 சதவீதம் என குறிப்பிட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x