

பண்டிகைக் காலம் தொடங்கும் முன்பே பல நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது. மாருதி, ஹூண்டாய், ஹோண்டா, போர்டு மற்றும் டாடா மோட்டார் நிறுவனங்களின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
அதேசமயம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை சரிந்துள்ளது.
மாருதி நிறுவன கார் விற்பனை 6.8 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 1,06,083 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 99,290 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் ஆல்டோ, வேகன் ஆர் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்திய எஸ்-கிராஸ் கார்கள் 3,600 வரை செப்டம்பரில் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 42,505 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 35,041 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஹோண்டா நிறுவன கார் விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் 18,509 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 15,015 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 6 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இந்நிறுவன தயாரிப்புகளின் விற்பனை 39,693 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 42,408 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 10,226 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இந்நிறுவனம் 9,766 கார்களை விற்பனை செய்திருந்தது.
போர்டு இந்தியா நிறுவனம் செப்டம்பரில் 8,274 கார்களை விற்பனை செய்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன கார் விற்பனை 6,786 ஆக இருந்தது.
இரு சக்கர வாகனங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவன விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 4,30,732 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன தயாரிப்பு விற்பனை சற்று அதிகரித்ததில் மொத்தம் 6,06,744 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தயாரிப்பு விற்பனை செப்டம்பரில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 67,267 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஐஷர் மோட்டார்ஸின் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரித்ததில் மொத்தம் 43,741 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 27,540 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.