ரூ. 2 கோடி வரையிலான வீடுகளுக்கு வரி தளர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நடுத்தரப் பிரிவினர் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக ரூ 2 கோடி வரையிலான வீடுகளுக்கான வரி விகிதங்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்சார்பு இந்தியா 3.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அவற்றின் விவரங்கள் வருமாறு:
1) தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம்
கோவிட்-19-இல் இருந்து நாடு மீண்டு வரும் சமயத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யாமல் புதிய தொழிலாளர்களை சேர்த்தாலோ, அல்லது ஏற்கெனவே வேலை இழந்தவர்களுக்கோ இந்த திட்டம் பலனளிக்கும்.
2) அவசரகால கடன் உத்தரவாத திட்டம்
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வியாபாரங்கள், முத்ரா கடனாளிகள் மற்றும் தனிநபர்கள் (வர்த்தகக் காரணங்களுக்கான கடன்கள்) ஆகியோருக்கான இந்த திட்டம் 2020 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
3) உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்
10 முக்கியத் துறைகளுக்கு ரூ 1.46 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உள்நாட்டு உற்பத்தியில் போட்டித் திறனை ஊக்குவிக்க உதவும்.
4) பிரதமரின் வீட்டுவசதி திட்டம்- நகர்ப்புறம்
இந்த வருடம் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ 8,000 கோடியைத் தவிர, பிரதமரின் வீட்டுவசதி திட்டம்- நகர்ப்புறம்-க்கு கூடுதலாக ரூ 18,000 கோடி வழங்கப்படுகிறது. 30 லட்சம் வீடுகளுக்கு இது உதவி, 78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
5) கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கு ஆதரவு
ஒப்பந்தங்களுக்கான செயல்பாட்டு பாதுகாப்பு உத்தரவாதம் 5-10 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு இது உதவும்
6) கட்டுமானர்களுக்கும், வீடு வாங்குவோருக்கும் வருமான வரி நிவாரணம்
நடுத்தரப் பிரிவினர் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக ரூ 2 கோடி வரையிலான வீடுகளுக்கான வரி விகிதங்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
7) உள்கட்டமைப்பு கடனுதவிக்கான தளம்
தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி என்னும் கடன் தளத்தில் ரூ 6,000 கோடி பங்கு முதலீட்டை அரசு மேற்கொள்ளும்
8) விவசாயத்துக்கு ஆதரவு
உர நுகர்வு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருப்பதால், மானிய விலையிலான உரங்களுக்கு ரூ 65,000 கோடி வழங்கப்படுகிறது
9) ஊரக வேலைவாய்ப்புகளுக்கு ஊக்கம்
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக பிரதமரின் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதியாக ரூ 10,000 கோடி வழங்கப்படுகிறது
10) திட்ட ஏற்றுமதிகளுக்கு ஊக்கம்
இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (ஐடியா) கிழ், திட்ட ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக எக்சிம் வங்கிக்கு ரூ 3,000 கோடி வழங்கப்படுகிறது
11) முதலீடு மற்றும் தொழிலக ஊக்கம்
முதலீடு மற்றும் தொழிலக செலவுகளுக்கு ரூ 10,200 கோடி கூடுதல் தொகை வழங்கப்படுகிறது
12) கொவிட் தடுப்பு மருந்துக்கு ஆராய்ச்சி & மேம்பாட்டு மானியம்
கொவிட் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மானியமாக உயிரிதொழில்நுட்பத் துறைக்கு ரூ 900 கோடி வழங்கப்படுகிறது
