Published : 12 Nov 2020 05:32 PM
Last Updated : 12 Nov 2020 05:32 PM

தமிழகத்தின் பல இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனை: ரூ.500 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு

புதுடெல்லி

தமிழகத்தின் பல இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.500 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்க்பட்டுள்ளதாவது:

சென்னையில் தங்கம், வெள்ளி நகைகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை இம்மாதம் 10-ஆம் தேதி சோதனை நடத்தியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மும்பை, கொல்கத்தா என 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் பல இடங்களில் கணக்கில் காட்டப்படாத தங்கம், வெள்ளி இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 814 கிலோ அளவிலான தங்கம், வெள்ளி நகைகள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி. இவை அனைத்துக்கும் வரிவிதிக்கப்படவுள்ளது.

இவை வர்த்தக கையிருப்பு என்பதால், இந்த தங்கம், வெள்ளி நகைகளை வருமானவரிச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய முடியவில்லை. வர்த்தகக் கையிருப்புகளை பறிமுதல் செய்ய வருமானவரிச் சட்டம் 1961 தடைவிதிக்கிறது.

கடந்த 2018-19-ம் நிதியாண்டில் மட்டும், இந்த குழுமம், கணக்கில் காட்டாமல் ரூ.102 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, கைப்பற்றப்பட்ட கணினி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2019-20, 2020-21-ஆம் ஆண்டுக்கான இந்த குழுமத்தின் தரவுகள் அனைத்தும், தரவு தடயவியல் உபகரணம் மூலம் கணினிகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வணிக வளாகங்களில், கணக்கில் காட்டாமல் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தங்கமும், வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மையான வர்த்தக விவரங்களை மறைப்பதற்காக, இந்த குழுமம், ஜேபேக் எனப்படும் தொகுப்பைப் பராமரித்து வருகிறது. ரசீதுகள் மூலம் கொண்டு செல்லப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விவரங்கள் டெலிவரி செய்யப்பட்டதும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவரை பெறப்பட்ட தரவுகள் மூலம், மற்ற வியாபாரிகளின் கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்படும். தடயவியல் நிபுணர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, கணக்கில் காட்டப்படாத வருமான தகவல்களைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சோதனைகள் மூலம், இதுவரை ரூ.500 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.150 கோடிக்கு, இந்தக் குழுமத்தின் தலைவர் தானாக முன்வந்து கணக்கு காட்டியுள்ளார். இந்தக் குழுமத்தின் வர்த்தகம் அல்லாத முதலீடுகள் குறித்தும், லாபத்தை குறைத்துக் காட்ட பின்பற்றிய இதர முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x