ரயில்வே மருத்துவமனைகளை நிர்வகிக்க மென்பொருள்: ரயில்டெல் உடன் ஒப்பந்தம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளின் நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க, ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனை நிர்வாக தகவல் முறை’ எனும் மென்பொருளை அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வேக்குச் சொந்தமாக, 125 சுகாதார மையங்களும், 650 மருத்துவமனைகளும் நாடு முழுவதும் உள்ளன. இவற்றில் மருத்துவமனை நிர்வாகத்தையும், நோயாளிகளின் சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில், மருத்துவ நிர்வாக தகவல் முறைக்கான மென்பொருளை ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து ரயில்வேத் துறை அமல்படுத்த உள்ளது.

இதற்காக ரயில்டெலுக்கும், இந்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கிளவ்ட் அடிப்படையிலான ஓப்பன் சோர்ஸ் மருத்துவ நிர்வாக தகவல் முறை மென்பொருள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், பேசியதாவது :

‘‘அனைத்து வகையிலும் நாங்கள் டிஜிட்டல் மயத்தை மேற்கொள்ள உள்ளோம். தொடர்ந்து மாற்றத்தை மேற்கொள்கின்றோம். இந்த மருத்துவ நிர்வாக தகவல் முறை எனும் மென்பொருள் தனித்தன்மையான மருத்துவ அடையாள முறையுடன் இணைக்கப்பட உள்ளது.

செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது. இந்த மையம், தொழில் நுட்ப மாற்றங்களை அதன் செயற்கை நுண்ணறிவின் வாயிலாக, தரவு ஆய்வுகள் அல்லது செயலி அடிப்படையிலான சேவைகளை இயக்கும். ரயில்டெல் நிறுவனத்துடனான எங்களது முக்கியத்துவம் வாய்ந்த உறவு என்பது எப்போதுமே தகுதியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

காணொலி கண்காணிப்பு முறை, இ-அலுவலக சேவைகள், தேவைக்கேற்ற பொருளடக்கம், நாடு முழுவதும் முக்கியமான ரயில்நிலையங்களில் வைஃபை வசதிகள் ஏற்படுத்தியது போன்ற திட்டங்களை அமல்படுத்த அவர்கள் உதவி செய்துள்ளனர்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in