Published : 10 Nov 2020 04:00 PM
Last Updated : 10 Nov 2020 04:00 PM

7 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: முக்தர் அப்பாஸ் நக்வி

புதுடெல்லி

கரோனா பெருந்தொற்று காரணமாக ஏழு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கைவினைப்பொருட்கள், பாரம்பரியக் கலைப்பொருட்களுக்கான “ஹுனார் ஹாட்” கண்காட்சி நாளை மீண்டும் தொடங்குகிறது.

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி துவங்கி வைப்பார்.

நாளை முதல் நவம்பர் 22- ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், களிமண், உலோகங்கள், மரம், சணல், மூங்கிலால் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்களும், மண்பாண்டங்களும் அனைவரையும் கவரும் முக்கிய அம்சங்களாக விளங்கும் என்று அமைச்சர் இன்று தெரிவித்தார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, அழியும் நிலையில் இருந்த பாரம்பரிய மற்றும் புராதன கைவினைப் பொருட்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

உள்ளூர் தயாரிப்புப் பொருட்களைக் கவர்ச்சிகரமாக வடிவமைப்பதில் பல்வேறு நிறுவனங்கள் கைவினைக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதாக அவர் கூறினார். இது போன்ற முயற்சிகள், தற்சார்பு இந்தியா கனவை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாளை துவங்க உள்ள கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றிருக்கும் என்றும், அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரபலமான கைவினைப் பொருட்களும், பல்வேறு மாநிலங்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஹுனார் ஹாட் கண்காட்சியால், கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், சமையல் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

http://hunarhaat.org/ என்ற இணையதளம் வாயிலாகவும் இந்த கண்காட்சியில் இடம் பெறும் கலைப்பொருட்களை வாங்கலாம் என்று அவர் கூறினார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x