Published : 08 Oct 2015 10:27 AM
Last Updated : 08 Oct 2015 10:27 AM

பாதிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறுவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவிப்பு

புகை அளவு மோசடி சாப்ட்வேர் பொருத்தப்பட்டு பாதிக்கப்பட்ட கார்களை ஜனவரி மாதம் தொடங்கி 2016 இறுதிக்குள் திரும்ப பெற உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மத்தியாஸ் முல்லர்; இந்த வாரத்தில் தொழில் நுட்ப உதவிக்கான திட்டத்தை பெடரல் மோட்டார் டிரான் ஸ்போர்ட் ஆணையத்திடம் வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இனிமேல்தான் புதிய பாகங்களுக்கு ஆர்டர் செய்ய உள்ளதாகவும், ஜனவரியில் பழுது பார்க்கும் பணியை துவங்க இருக்கிறோம் என்றும் அந்த பணி அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கவேண்டிய ஃபோகஸ்வேகன் 11 மில்லியன் வாகனங்களில் எழுந்த புகை அளவு மோசடியால் பாதிக்கப் பட்டுள்ளது.

வெவ்வேறான அளவுகளுக்கு உள்ள இயக்குநர்களை கொண்ட நான்கு பேர் குழுதான் ஃபோக்ஸ்வேகன் இன்ஜினை வடிவமைத்துள்ளார்கள் . மோசடியில் ஈடுப்பட்ட அவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம் என்றும் முல்லர் தெரிவித்துள்ளார்.

சிக்கலான செயல்முறை

ஒரு தலைமை அதிகாரி என்ற முறையில் அந்த இன்ஜின் சாப்ட்வேர் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு இன்ஜினை வடிவமைப்பது என்பது சிக்கலான செயல்முறை. சோதனைகளிலும் அளவுகளை வடிவமைப்பதிலும் இன்ஜின் வடிவமைப்பாளர்களும், புரோகி ராமர்களும் தொடர்பு வைத்திருப்பார்கள். தலைமை அதிகாரி நேரடியாக இதில் தலையிடுவதில்லை என்றார்.

பெரும்பாலான வாகனங் களுக்கு இன்ஜினை சிறிய அளவில் சரி செய்தாலே போதுமானது. இதை இலவசமாகவே செய்ய இருக்கிறோம் என்று முல்லர் கூறியுள்ளார். மேலும் சிக்கன நடவடிக்கைகளிலும் இனி ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக 17 கால்பந்து கிளப்களில் முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட வாகனங் களுக்கு ஆகக் கூடிய செலவு களை கணித்து வருகிறோம். மேலும் அதற்கான அபாராத தொகையும் கணித்து வருகிறோம் என்றார்.

அமெரிக்காவில் மட்டும் சூழலியல் பாதுகாப்பு அமைப்புக்கு 18 பில்லியன் டாலர் அபராதம் கட்ட வேண்டியுள்ளதாக தெரிவித் துள்ளார். இறுதியாக யாரும் இதனுடன் அழிய போவதில்லை நானும் என் காரும் பாதுகாப்பாக உள்ளதாக முல்லர் கூறினார்.

இந்தியாவில் போலோவை விற்க வேண்டாம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சிறிய ரக காரான போலோவை இனி இந்தியாவில் விற்க வேண்டாம் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டீலர்களுக்கு தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற புகை மோசடி சாப்ட்வேர் புகாருக்கும் இந்த நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.வேறு சில தொழில்நுட்ப காரணங்களால்தான் இந்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை 20,030 போலோ கார்களை ஃபோகஸ்வேகன் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

அதில் 13,827 கார்களை உள்நாட்டிலும், 6,052 கார்களை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. வாகன சோதனை அமைப்பான ஏஆர்ஐ (ARAI) சோதனை அமைப்போடு ஃபோக்ஸ்வேகன் தொடர்பு கொண்டுள்ளது. ஏஆர்ஐ அமைப்பு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் தற்போது விற்பனையாகியுள்ள EA189 இன்ஜின் கொண்ட கார்களின் விவரங்களை கேட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x