விரைவில் தொழில்முனைவோருக்கு புதிய அறிவிப்புகள்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்

விரைவில் தொழில்முனைவோருக்கு புதிய அறிவிப்புகள்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்
Updated on
1 min read

தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல முக்கிய அறிவிப்புகளை வருகிற டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட இருக்கிறார் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ``ஸ்டார்ட்அப் இந்தியா; ஸ்டேண்ட்அப் இந்தியா’’ என்ற புதிய பிரசாரத்தை முன்வைத்தார். இதன் மூலம் அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வசதியையும் நிறைய வேலை வாய்ப்பையும் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

மோடி வெளியிடுவார்

இது குறித்து டைகான் விழாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசுகையில், “இந்தியாவில் தொழில்முனைவோருக்கான சூழலை முன்னேற்றி கொண்டு செல்லும் விதமாக வருகிற டிசம்பர் மாத பிற்பாதியில் பிரதமர் மோடி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இந்த அறிவிப்புகள் அனைவருக்குமே மிக ஆச்சரியமானதாக இருக்கும்.

கடந்த அரசு 10 வருடங்களில் செய்ததை நாங்கள் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் செய்துள்ளோம். தொழில்முனைவோர்கள் மிக எளிதில் தொழில் தொடங்குவதற்கு முதலீடுகளை உறுதிசெய்ய மத்திய அரசு கடுமையாக முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் மிகச்சிறந்த தொழில்முனைவோர்களை மற்றும் புதியதை தொடங்குவதில் இந்தியா உலகிலேயே மிகச்சிறந்த நாடாக திகழும் என்பதை உறுதிசெய்யும் விதமாக பிரதமர் மோடியின் அறிவிப்பு இருக்கும்” என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நெட்வொர்க் இனவோஷன் சோதனை மையம் மூலம் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இந்தியாவில் தொழில் தொடங்குவது மிக எளிதானது என்ற நிலையை உருவாக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறோம் என்றும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in