

ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா- அரபு எமிரேட்ஸ் இடையே, ‘‘ இந்திய பாதுகாப்பு தொழில்துறையில் கூட்டாக செயல்பட உலகளாவிய அணுகுமுறை: இந்தியா-ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி’’ என்ற கருப்பொருளில் இணைய கருத்தரங்கு, 2020 அக்டோபர் 27ம் தேதி நடந்தது.
இதற்கு இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ராணுவ தளவாட உற்பத்தி துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இணைய கருத்தரங்கில், இருநாட்டு தூதர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று, இருநாடுகள் இடையேயான வலுவான உறவு குறித்து பேசினர். ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் வரத்தகத்தில் இரு நாடுகள் மேலும் இணைந்து செயல்பட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை இணை செயலாளர் சஞ்சய் ஜாஜூ பேசுகையில், ‘‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இரு நாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு, உலகளாவிய விநியோக சங்கிலியில் இடம் பெற வேண்டும் மற்றும் இந்திய ராணுவ தளவாட உற்பத்தி துறையில், வெளிநாட்டு நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.
ராணுவ தளவாட ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த இணைய கருத்தரங்கு நடந்தது.
இந்தியா சார்பில் எல் அண்ட் டி டிபன்ஸ், ஜிஆர்எஸ்இ, ஓஎஃப்பி, எம்கேயு, பாரத் ஃபோர்ஜ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் ராணுவ தளவாட தயாரிப்புகள் மற்றும் ஆயுதங்கள், ரேடர்கள், கவச வாகனங்கள், கடலோர கண்காணிப்பு கருவிகள், ஆகாஷ் ஏவுகணை மற்றும் வெடி பொருட்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் ஸ்ட்ரெய்ட் குரூப், ராக்ஃபோர்ட் எக்ஸ்எல்லேரி, எட்ஜ், டவாசன் மற்றும் மராகெப் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகள் குறித்து விளக்கின.
இந்த இணைய கருத்தரங்கில் 180 பேர் பங்கேற்றனர். 100 மெய்நிகர் கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.