Published : 27 Oct 2020 07:27 PM
Last Updated : 27 Oct 2020 07:27 PM

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கன்டெய்னர்களை நேரடியாக கொண்டும் செல்லும் வசதி  தொடக்கம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கன்டெய்னர்களை நேரடியாக கொண்டும் செல்லும் வசதியை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கன்டெய்னர்களை நேரடியாக கொண்டு செல்லும், நேரடி துறைமுக நுழைவு வசதியை (டிபிஇ), மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய மன்சுக் மாண்டவியா, இது சரக்கு போக்குவரத்தை விரைவு படுத்துதல் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவை குறைத்தல் ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

சர்வதேச வணிகத்தில் கப்பல் சரக்கு போக்குவரத்து தொழிலில் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் செயல் திறனை அதிகரிக்கவும், காலவிரையத்தைக் குறைக்கவும், குறைவான கட்டண செலவு ஆகியவற்றை இந்த வசதி தருவதுடன் ஏற்றுமதியாளர்கள் வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குவதை அதிகரிக்க டிபிஇ உதவிகரமாக இருக்கும் என்றும் அமைச்சர் மாண்சுக் குறிப்பிட்டார்.

இடையில் எந்த ஒரு சரக்கு கன்டெய்னர் நிலையமும் குறுக்கிடாமல், இந்த அதிநவீன நேரடி துறைமுக நுழைவு வசதி, தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக துறைமுகத்துக்கு சரக்கு கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். டிபிஇ 24 மணி நேரமும் செயல்படுவதால், சரக்கு போக்குவரத்தில் தாமதம் ஏற்படாது.

தொழிற்சாலை பொருட்கள், இ-முத்திரையிடப்பட்ட கன்டெய்னர்கள் உள்ளிட்ட ஏற்றுமதி சரக்குகளுக்கு சுங்க அனுமதியை வழங்குவதற்காக சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகத்தின் லாரி நிறுத்தும் முனையம் உள்ளே 18,357 சதுர மீட்டரில் இந்த டிபிஇ வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18000 கன்டெய்னர்களை ஒரு மாதத்துக்கு கையாள முடியும்.

மத்திய கிடங்கு வாரியத்தின் வாயிலாக இந்திய சுங்கத்துறை உருவாக்கி உள்ள டிபிஇ வசதி, எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரே இடத்தில் ஏற்றுமதி ஆணை உத்தரவை உருவாக்குகிறது. மத்திய கிடங்கு வாரியம், சுங்க அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழுவானது, வ.உ.சி துறைமுகத்துடன் இணைந்து. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சான்றழிக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வாடிக்கையாளர்களுக்காகப் பணியாற்றும்.

முன்னதாக, தொழிற்சாலை பொருட்களைக் (சுய முத்திரையிடப்பட்டவை) கொண்ட கன்டெய்னர்கள், தூத்துக்குடியில் உள்ள கன்டய்னர் சரக்கு நிலையங்கள்/உள்நாட்டு கன்டெய்னர் டெப்போ ஆகியவற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த கன்டய்னர் சரக்கு நிலையங்கள் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கின. இதன் காரணமாக, கன்டய்னர் முணையத்துக்குள், சுய முத்திரையிடப்பட்ட ஏற்றுமதி கன்டெய்னர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

எனவே, விரைவான & செலவு குறைந்த ஏற்றுமதி அனுமதி அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இ-முத்திரையிடப்பட்ட தொழிற்சாலை பொருட்கள் ஏற்றுமதி அனுமதியை வழங்குவதற்காக துறைமுகத்தின் சார்பில் டிபிஇ வசதி உருவாக்கப்பட்டது. இந்த வசதியை 30 ஆண்டுகளுக்கு செயல்படுத்த மத்திய கிடங்கு வாரியத்துடன், துறைமுகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டிபிஇ வசதியை செயல்படுத்த சுங்கத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் தமது உரையில், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் தொலைநோக்கு 2030-க்கு ஏற்ப உலகத்தரத்தில் நமது துறைமுகளை உருவாக்க துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் தகவல் தொழில்நுட்ப வசதி சார்ந்த கட்டமைப்புகள் நிச்சயம் உதவும் என்றார்.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் டி.கே.ராமசந்திரன், மத்திய கிடங்கு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அருண் குமார் ஸ்ரீவத்சவா மற்றும் துறைமுக அதிகாரிகள் இந்த இணைய வழி தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x