

பிரிட்டிஷ் தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ரூ.8,500 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது
முன்னதாக 2007-ம் ஆண்டு அகமதாபாதில் உள்ள கால் சென்டர் பங்குகளை விற்பனை செய்தது தொடர்பாக ரூ. 8.500 கோடி தொகையை பங்கு பரிமாற்ற கட்டணமாக செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தீர்ப்பாயம் வோடபோனுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஏ.கே. மேனன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த பரிவர்த்தனையில் வரி செலுத்த தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக இனி இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் துணிச்சலுடன் தொழில் தொடங்க முன்வரும் என்று வோடபோன் நிறுவனத் துக்கு ஆதரவாக வாதாடிய டிஎம்டி எனும் சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் பெரெஷ்தே சேத்னா கூறினார்.
2008-09-ம் ஆண்டு வோடபோன் வரி தாக்கல் செய்தபோது கால் சென்டர் விற்றதில் பங்கு பரிமாற்ற கட்டணம் ரூ.8,500 கோடி செலுத்த வேண்டும் என வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் வோடபோன் வழக்கு தொடர்ந்தது. ஆனால் வரித்துறை அதிகாரிகள் விதித்த தொகையை செலுத்த வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வோடபோன் வழக்கு தொடர்ந்தது. அது தற்போது அந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கால் சென்டர் விற்றதில் பங்கு பரிமாற்ற கட்டணம் ரூ. 8,500 கோடி செலுத்த வேண்டும் என வரித்துறை தீர்ப்பாயம் கூறியது.