

எல் அண்ட் டி பைனான்ஸ் நிகர லாபம் 18% உயர்வு
எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து 215 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 181 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
அதே சமயம் கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 1,586 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் தற்போது 1,837 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் கடன் வழங்கும் விகிதம் 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 42,762 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது 50,986 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கடன் வழங்கும் விகிதத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் வொய்.எம்.தியோஸ்தாலே தெரிவித்தார். இதே வளர்ச்சியை வரும் காலத்திலும் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 68.55 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஜிசிபிஎல் நிகர லாபம் 22% உயர்வு
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (ஜிசிபிஎல்) நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 287 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 234 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 8.97 சதவீதம் உயர்ந்து 2,244 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,060 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் சர்வதேச விற்பனை வருமானம் 15 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து 486 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 377 கோடி ரூபாயாக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை 9.97 சதவீதம் உயர்ந்து 4,342 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,948 கோடி ரூபாயாக இருந்தது.
நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் இதே அளவிலான வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ் தெரிவித்தார். தவிர இந்த பிரிவுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்றார்.
டிவிடெண்ட்
இதற்கிடையே நிறுவனத்தின் இயக்குநர் குழு இரண்டாவது இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 100 சதவீத டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது.