

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கபட்ட பி.ஜி.ஸ்ரீனிவாஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இவரது ராஜிநாமாவை நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. வரும் ஜூன் 10-ம் தேதி அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இன்ஃபோஸிஸ் நிறுனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராகவும், தலைவராகவும் பி.ஜி.ஸ்ரீனிவாஸ் இருந்தார். மும்பை பங்குச்சந்தைக்கு அனுப்பிய செய்தி குறிப்பு மூலம் இவரது ராஜிநாமா தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோஸிஸிலிருந்து கடந்த சில மாதங்களாகவே முக்கியமான நபர்கள் வெளியேறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் நாராயண மூர்த்தி நிறுவனத்துக்குள் மீண்டும் வந்த பிறகு வெளியேறும் 10-வது முக்கிய நபர் பி.ஜி.ஸ்ரீ னிவாஸ் ஆவார்.
தற்போதைய சி.இ.ஓ. எஸ்.டி. சிபுலால் வரும் ஜனவரி-யில் (2015) ஓய்வு பெறுவதை அடுத்து, நிறுவனர் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் ஒருவரான பி.ஜி.ஸ்ரீனிவாஸ் அடுத்த தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக ைசெய்தி வெளியானது.
இப்போது இவர் விலகி இருப்பதால், அடுத்த தலைவராக வேறு ஒருவரை நிறுவனம் முடிவு செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுக்கிறது. இது குறித்து நாராயண மூர்த்தி கூறும்போது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஓர் அங்கம் பி.ஜி.ஸ்ரீ னிவாஸ், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களில் முக்கியமானவர். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் இயக்குநர் குழு அவருக்கு நன்றியையும், அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது என்றார்.
இது குறித்து ஸ்ரீனிவாஸ் கூறும் போது இன்ஃபோசிஸில் பணியாற்றிய காலம் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. நிறுவன வளர்ச்சியின் முக்கிய காலத்தில் நானும் பங்கு வகித்தது பெருமையாக இருக்கிறது. இன்ஃபோஸிஸ் நிறுவனத்துக்கும் இயக்குநர் குழுவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
1999-ம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் ஸ்ரீனிவாஸ். இதற்கு முன்பு ஏ.பி.பி. நிறுவனத்தில் 14 வருடங்கள் வேலை பார்த்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர், ஐ.ஐ.ஏ. ஆமதாபாத்தில் நிர்வாகப்பட்டம் பெற்றவர்.
கோல் இந்தியா தலைவர் ராஜிநாமா
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை எஸ். நர்சிங் ராவ் ராஜிநாமா செய்தார். புதிதாக அமையவுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதன்மைச் செயலராக அவர் ஜூன் 2-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவருக்குப் பதிலாக கோல் இந்தியாவுக்கு யார் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இவரது ராஜிநாமாவை மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் மரபுசாரா துறையின் இணை அமைச்சர் பியுஷ் கோயல் இன்னும் ஏற்கவில்லை.
56 வயதான ராவ் இப்போது முதன்மைச் செயலராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் கோல் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்த தலைவரை நியமிக்க குறைந்தது 6 மாதங்களாகும் என்று கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை பதவிக்கு நியமிப்பதற்கான வழிகாட்டுதலின்படி தேர்வுக் குழு இப்பதவிக்கு தகுதியானவர்களின் பெயர்களை முன்மொழிய வேண்டும்.
பிறகு நேர்முகத் தேர்வு மூலம் பட்டியலில் உள்ளவர்களை இறுதி செய்ய வேண்டும். பிறகு நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை குழு இதுகுறித்து ஆலோசனை அளிக்கும். இத்தகைய சூழலில் ராவ் உடனடியாக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.