Published : 22 Oct 2020 10:50 AM
Last Updated : 22 Oct 2020 10:50 AM

பொருளாதார மீட்டெழுச்சியின் வாசற்படியில் இருக்கிறோம்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை

கரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு, பொதுமுடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

டில்லியில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றுப் பேசிய ரிசர்வ வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு, நிதி நிறுவனங்கள், போதுமான மூலதனம் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

கரோனா வைரசால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள, நிதி விரிவாக்க திட்டத்தை, இந்தியா பின்பற்றியது. கரோனாவுக்குப் பின், இந்தியா பின்பற்றவேண்டிய நிதி சார்ந்த திட்ட வரைபடத்தை, மத்திய அரசு வகுக்கவேண்டும்.

வங்கிகளும் நிதிநிறுவனங்களும் போதிய கடன் அளிக்கும் வகையில் மூலதனத் திரட்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆர்பிஐ-யின் நிதிக்கொள்கையும் அரசின் நிதிக் கொள்கையும் விரிவாக்கக் கவனத்துடன் வேலை செய்து வருகின்றன. உள்ளடக்கிய விரிவாக்கம் மற்றும் பொருளாதார சரிவு மேம்பாடு என்ற வழக்கமான சுழற்சிக்கு எதிராக இருதரப்பு நிதிக்கொள்கை முடிவுகளும் ஒன்றாக உள்ளன.

வங்கிகள், மற்றும் வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களின் நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்கள் தேவை. பொதுவாக வங்கிகளின் சீர்த்திருத்தங்களை தனியார்மயத்துடன் மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள்.

கரோனா பெருந்தொற்றின் விளைவுகளிலிருந்து பொருளாதாரம் மீட்பின் வாசற்படியில் உள்ளது. நிதி நிறுவனங்கள் போதிய மூலதனம் வைத்திருப்பது அவசியம். ஏற்கெனவே மூலதனத்தை அதிகரித்துள்ளனர். பலரும் மூலதனங்களை அதிகரித்துள்ளனர். தனியார் துறையினர் மூலதனத் திரட்டி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், வரும் மாதங்களில் இவர்களும் மூலதனத்தை அதிகரிப்பார்கள்.

பொருளாதாரத்தின் மீட்புக் கட்டம் தொடங்கியவுடன் போதிய அளவு கடன் கொடுக்கும் வகையில் வங்கிகளும் நிதிநிறுவனங்களும் இருக்க வேண்டும்” என்றார் சக்திகாந்த தாஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x