Published : 22 Oct 2020 06:38 AM
Last Updated : 22 Oct 2020 06:38 AM

அமேசான் ஊழியர்கள் 2021 ஜூன் வரை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதி

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இன்கார்ப்பரேஷன் கரோனா வைரஸில் இருந்து தனது பணியாளர்களை காக்கும் நோக்கில் வீட்டில் இருந்து பணி புரியும் சூழலை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டித்துள்ளது.

வீட்டில் இருந்து தற்போது பணி புரியும் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை இதே நிலையிலேயே தொடரலாம் என்று அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு உலகம் முழுவதும் உள்ள அமேசான் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்றும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் வீட்டில் இருந்து பணி புரியும் சூழலை ஜனவரி 2021 வரை அமேசான் அறிவித்திருந்தது. தற்போது நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு காலத்தை நீட்டித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களில் அமெரிக்காவில் மட்டும் 19 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாயினர்.

கரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்குப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனா தொற்றுக்கு அதிகளவு பாதிப்புக்கு உள்ளானதாக சில ஊழியர்களும், தொழிற்சங்கத்தினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அலுவலகத்துக்கு பணிக்கு வரும் அத்தியாவசிய பணியாளர்களின் நலனைக் காக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அலுவலகத்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது, பணியாளர்களின் உடல் வெப்ப நிலையை தினசரி பரிசோதிப்பது, ஊழியர்களுக்கு முகக் கவசம், கைகளை சுத்தம் செய்ய சானிடைஸர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் ட்விட்டர் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பணியாளர்களை வீட்டிலிருந்து பணி புரியும் காலத்தை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளது. அடுத்த ஆண்டிலும் எந்த தேதியில் அலுவலகத்துக்கு வரலாம் என்பது குறித்து திட்டவட்ட அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிடவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான கால வரையறையை நீட்டித்துள்ளது.

இதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை வரையிலும், கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் நீட்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x