

இந்தியா தனது எரிசக்தி தேவையை 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நாடாக இன்னும் சில பத்தாண்டுகளில் மாறும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்கிறது. இந்நிலையில் இந்தியாவின் எரிசக்தி தேவையை படிம எரிபொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. 2035-க்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற்ற இலக்கு வைத்திருப்பதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக உள்ளது. நாட்டின் 80 சதவீத எரிசக்தி தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி ஆகிறது. எனவே சுயசார்பு பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க நம்முடைய எரிபொருள் தேவையையும் நாமே பூர்த்தி செய்துகொள்வதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், டெலிகாம் மற்றும் ரீடெய்ல் ஆகியவற்றைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்த உள்ளது. ஹைட்ரஜன், காற்று, சூரிய சக்தி, பேட்டரி போன்றவற்றில் களம் இறங்க உள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.