

ரூ. 6,000 கோடி அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஹெச்டிஎப்சி வங்கி அதிகாரியாவார்.
டெல்லியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியி்ல் ரூ. 6,000 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.
இது தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கியின் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை பிரிவில் பணியாற்றிய கமல் கல்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வர்த்தகர்கள் சந்தன் பாட்டியா, குர்சரண் சிங் தவான் மற்றும் சஞ்சய் அகர்வாலுக்கு உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 2 பேரை இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கைது செய்துள்ளது. சுரேஷ் குமார் கார்க் மற்றும் ஜென்னிஸ் துபே ஆகிய இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. வங்கியின் பொறுப்பாளர் மற்றும் அந்நியச் செலாவணி பிரிவின் தலைவராக இவர்களிருவரும் பதவி வகித்து வந்தனர்.
இது தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கிக்கு அனுப்பிய தகவலில் எவ்வித கருத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் பாட்டியா மற்றும் அகர்வால் ஆகியோர் நிதியை பெறுவதற்கு ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் உதவி யுள்ளார். இதற்காக ஒரு டாலருக்கு 30 காசு முதல் 50 காசு வரை அவர் கமிஷன் பெற்றுள்ளார். இதில் ஹாங் காங்கில் ஏஜெண்டாக தவான் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இவர் ஆயத்த ஆடை ஏற்றுமதி யாளராவார்.
இவர்கள் அனைவரும் 15 போலி நிறுவனங்களுக்கு தரகர்களாக செயல்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 59 போலி நிறுவனங்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போலியான நிறுவனத்தை உருவாக்கி அந்நியச் செலாவணி பரிவர்த்தனை செய்து சுங்க வரியை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் பல இடைத்தரகர்கள் மற்றும் பாங்க் ஆப் பரோடா பணியாளர்கள் கைதாவார்கள் என்று தெரிகிறது.
பாங்க் ஆப் பரோடா வங்கியின் டெல்லி அசோக் விகார் கிளையில் மொத்தம் 59 கணக்குகள் மூலம் ரூ. 5,151 கோடி பரிவர்த்தனையாகி யுள்ளது. இதில் வங்கியில் ரூ. 343 கோடி மட்டுமே போடப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ. 4,808 கோடி தொகை வங்கிக்கு பல்வேறு வழிகள் மூலம் வந்துள்ளது.
வங்கி பரிவர்த்தனையில் குளறு படி நிகழ்வதைக் கண்டுபிடித்து அதுகுறித்து அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்ததாக பாங்க் ஆப் பரோடா செயல் இயக்குநர் பிபி ஜோஷி தெரிவித்துள்ளார்.