Published : 15 Oct 2020 07:48 PM
Last Updated : 15 Oct 2020 07:48 PM

ஜம்மு காஷ்மீரில் அமைகிறது ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப் பாதை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜோசிலா சுரங்கப்பாதை தோண்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார். இது ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்படும் ஜோசிலா சுரங்கப்பாதை ஸ்ரீநகர் மற்றும் லே இடையே தேசிய நெடுஞ்சாலை எண் -1-ல் எல்லா பருவ நிலையிலும் செல்லக்கூடிய போக்குவரத்தை ஏற்படுத்தும். ஜோஜிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கி.மீ தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலை 1-ல் ஸ்ரீநகர் மற்றும் லே இடையே ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே போக்குவரத்து நடக்கும். மீத 6 மாதங்களுக்கு பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்படும். உலகிலேயே மிக அபாயகரமான சாலையில் இதுவும் ஒன்று.

இங்கு சுரங்கப் பாதை அமைப்பதற்கான திட்டத்தை எல்லைகள் ரோடு அமைப்பு, கடந்த 2013ம் ஆண்டு தயாரித்தது. இதற்கான டெண்டர் முயற்சிகள் 4 முறை தோல்வியடைந்தன. இறுதியில் இதற்கான டெண்டர், ஐடிஎன்எல் (ஐஎல் மற்றும் எப்எஸ்) நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2018ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஐஎல் மற்றும் எப்எஸ் நிறுவனவத்தின் நிதி நெருக்கடி பிரச்னை காரணமாக இத்திட்டம் தடைபட்டது. இதனால் இந்த ஒப்பந்தம் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இதற்கான திட்டத்தை மத்தியமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் மறு ஆய்வு செய்தார். இத்திட்டம் மத்திய சாலை போக்குவரத்து துறை தலைமை இயக்கனர் ஐ.கே. பாண்டே தலைமையிலான நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுரங்கப்பாதை நிபுணர்களுடன் ஆலோசித்து தாக்கல் செய்யப்பபட்ட அறிக்கைக்கு கடந்த மே மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து இந்த சுரங்கப் பணியை மெகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ரூ. 4509. 50 கோடி மதிப்பில் இந்த பணி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை தோண்டும் பணியை மத்தியமைச்சர் நிதின் கட்கரி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த சுரங்கப்பாதை, ஸ்ரீநகர் மற்றும் லே இடையே எல்லா பருவநிலையிலும் இணைப்பை வழங்கும் என அவர் கூறினார். ஆசியாவிலேயே மிகப் பெரிய சுரங்கப் பாதையாக இது இருக்கும் எனவும், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இடையே இந்த சுரங்கப்பாதை பொருளாதார வளர்ச்சி, சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் எனவும் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

இந்த சுரங்கப் பாதை திட்டம் மாற்றியமைக்கப்பட்டதன் மூலம் ரூ.4,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த சுரங்கப்பாதை பணியை முடிக்க 6 ஆண்டு காலம், நிர்ணயம் செய்யப்பட்டாலும், அதற்கு முன்பாகவே இப்பபணி முடிக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இந்த சுரங்கப் பாதை பணியை மேற்பார்வையிடவும், இதில் உள்ள உள்ளூர் பிரச்னைகளை தீர்க்கவும் லடாக் துணை நிலை ஆளுநர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் தலைமை செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 7 சுரங்கப்பாதை பணிகள் தற்போது நடைபெறுவதாகவும், காசிகுண்ட் மற்றும் பானிஹால் இடையே 8450 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இரட்டை சுரங்கப்பாதை பணி வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என அவர் கூறினார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செய்துள்ளது என்றும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் டாக்டர் வி.கே.சிங் பேசுகையில், ஜோசிலா கணவாய் பகுதிய சாலையில் தான் பயணம் செய்திருப்பதாகவும், இங்கு மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் தனக்கு தெரியும் என்றும் கூறினார். இந்த சுரங்கப்பாதை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசுகையில், இந்த சுரங்கப் பாதை பணி தொடக்கம் இப்பகுதி மேம்பாட்டு திருப்பு முனை என கூறினார். இந்த சுரங்கப்பாதை உள்ளூர் வேலை வாய்ப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என அவர் கூறினார்.

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் முயற்சிகளை லடாக் துணை நிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூர் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x