Last Updated : 15 Oct, 2020 12:26 PM

 

Published : 15 Oct 2020 12:26 PM
Last Updated : 15 Oct 2020 12:26 PM

1930-ம் ஆண்டுகளுக்குப் பிறகு கரோனாவினால் மிகப்பெரிய பொருளாதார சீரழிவு நிலையை எதிர்கொள்கிறோம்: உலக வங்கி எச்சரிக்கை

1930-களில் உலகை உலுக்கிய மாபெரும் பொருளாதாரச் சரிவைப் போன்ற ஒரு பொருளாதார பெரும்சரிவினை கரோனாவினால் உலகம் அனுபவித்து வருகிறது என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.

கரோனா மக்கள் பெருந்தொற்றை அவர் இது பல வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்குப் “பேரழிவு நிகழ்வு” என்று வர்ணிக்கிறார்.

பொருளாதாரம் எவ்வளவு சுருங்கியிருக்கிறது என்றால் நாடுகள் கடன் நெருக்கடியில் அகப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள அளவுக்கு பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்றார் அவர்.

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலகவங்கித் தலைவர் மல்பாஸ், “பொருளாதார சரிவு ஆழமானது. 1930-ம் ஆண்டுகளில் உலகம் கண்ட பொருளாதார பெரும் சீரழிவுக்கு அடுத்தபடியான சீரழிவை எதிர்கொண்டு வருகிறோம். இது பல வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இந்த சரிவு ஒரு பெரும் சரிவுதான். பேரழிவு நிகழ்வு. தீவிர வறுமையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைத் தான் அலசவிருக்கிறோம். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பொருளாதார திட்டங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம்.

உலகம் தற்போது K-வடிவ பொருளாதார மீட்பில் உள்ளது. அதாவது வளர்ந்த நாடுகள் உதவ முடியும். அந்த நாடுகளில் வீட்டிலிருந்தே பணியை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் சந்தைகளை கவனித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அமைப்புசாரா தொழிலில் பணியில் உள்ளவர்கள் வேலையிழந்துள்ளனர். இவர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையே நம்பியிருக்கின்றனர்.

ஆனால் ஏழை நாடுகளில் அதுவும் ஏழ்மையிலும் ஏழ்மையில் இருக்கும் நாடுகளில் வருவாய் இல்லை, வேலைகள் இல்லை. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இத்தகைய நாட்டின் தொழிலாளர்களிடமிருந்து வரும் வருவாயும் இல்லை. எனவே இவர்கள் பற்றிய கவன ஈர்ப்பை மேற்கொண்டு இவர்களின் சமூகப் பாதுகாப்புக்காக உலக வங்கி கூடுதல் உதவி வழங்க விரும்புகிறது. மேலும் இந்த ஏழைநாடுகளில் வேளாணமைச் சிக்கல்களையும் அவதானித்து வருகிறோம்.

ஏற்றுமதிச் சந்தைகளை சில நாடுகள் திறந்து வைத்திருப்பது நல்லது. அதே போல் நாடுகள் தங்கள் மக்களுக்கு உணவுப்பாதுகாப்பு வழங்க மானிய முறைகளை மாற்றியமைப்பதையும் வரவேற்கிறோம்.

மக்கள் உயிர், மக்களின் சுகாதாரம், பாதுகாப்புக்கே இப்போது முன்னுரிமை வழங்குகிறோம். நாடுகள் தங்கள் பொருளாதாரங்களில் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிப்பது அவசியம். இதன் மூலம் தான் மக்கள் புதிய வேலைகளுக்கும் இடங்களுக்கும் செல்ல முடியும்.

எப்படிப் பார்த்தாலும் கோவிட்-19-க்கு முந்தைய பொருளாதாரமாக இருக்காது. அதனால் நாடுகள் தங்கள் முக்கிய தொழிற்துறைகளைப் பாதுகாப்பது அவசியம். மக்களுக்கு நேரடி பண உதவி திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறோம். பிரேசிலில் இதைச் செய்து வருகிறோம், ஜோர்டானில் இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.

நாடுகள் மக்கள் ஆரோக்கியத்துக்கு செலவிடுவதை முன்னுரிமையாகக் கொள்வதை உலக வங்கி வரவேற்கிறது. அதே போல் கல்வி, சமூக நலத்திட்டங்களையும் உலக வங்கி வரவேற்கிறது.

வளரும் நாடுகளில் பல கோடி குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை. கல்வி பின்னடைவு கண்டால் அது நாடுகளின் எதிர்காலத்துக்கே ஆபத்து. குறிப்பாக பெண்கள் படிப்பு இடைநிறுத்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து சரி செய்வது அவசியம்” என்றார் உலக வங்கித் தலைவர் மல்பாஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x