பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகள் வைத்துள்ள பெண்கள்
புதுடெல்லி: பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 56% பேர் பெண்கள் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2014 ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதிசார் உள்ளடக்கத்தை அடைவதற்கான உலகின் மிகப்பெரிய முன்முயற்சியான பிரதமரின் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம், நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கான வங்கிச் சேவை அணுகலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஆகஸ்ட் 19 வரை, மொத்தம் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவற்றில் ரூ.3.17 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது. கணக்கு வைத்துள்ளவர்களில் சுமார் 56 சதவீதம் பேர் பெண்கள். மேலும், 78 சதவீத கணக்குகள் கிராமப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இது எளிய மக்களுக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டுடன் கூடிய 41.29 கோடிக்கும் அதிகமான ருபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைகளுக்காக ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதியும் இதில் அளிக்கப்படுகிறது.
சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துள்ள இத்திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் காப்பீடு வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது. சேமிப்பு முறைகளின் அடிப்படையில் முத்ரா போன்ற கடனுதவிகளையும் பெற இத்திட்டம் வழிவகை செய்துள்ளது. நிதிசார் உள்ளடக்கம், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடையாளமாக இத்திட்டம் விளங்குகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, வங்கி அதிகாரிகள், வணிக அமைப்புகளின் அர்ப்பணிப்புமிக்க பணியே இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.