Published : 14 Oct 2020 12:53 PM
Last Updated : 14 Oct 2020 12:53 PM

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் விவசாயிகளிடம் தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள்: ஹர்தீப் சிங் பூரி குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடம் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

வேளாண் சீர்திருத்த மசோதா குறித்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் வேளாண் துறை சார்ந்த வல்லுநர்களுடன் அமிர்தசரசில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், புதிய வேளாண் சட்டங்கள் குறித்த பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடம் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த நிலையிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், நடப்பு பருவத்திற்கான கொள்முதலின் மூலம் அரசு முகமைகள் சாதனை படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேபோல் கோதுமையும் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், விவசாயிகள் எவ்வித பிரச்சனையையும் சந்திக்க மாட்டார்கள் என்று உறுதி அளித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு கரீப் பருவத்தில் 7.4 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கொள்முதல், 251 சதவிகிதமாக உயர்ந்து, அக்டோபர் 11, 2020 வரை 26.1 லட்சம் மெட்ரிக் டன்னாக பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு 31.7 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நெல்லுக்கான கொள்முதல், இவ்வாண்டு அக்டோபர் 11 வரை, 42.5 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்து, சென்ற ஆண்டைவிட 35 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

2020-21 ராபி பருவத்திற்கான கோதுமை கொள்முதல் செய்யும் நிலையங்கள் 21869ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு14838 நிலையங்களாக இருந்ததை விட 50 சதவீதம் கூடுதலாகும்.

கடந்த 2019- 20ஆம் ஆண்டு கரீப் பருவத்தின் போது 30549ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 30 சதவிகிதம் உயர்ந்து நடப்பாண்டு 39130ஆக அதிகரித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டு 48550ஆக இருந்த ராபி மற்றும் கரீப் பருவத்திற்கான கொள்முதல் நிலையங்கள், நான்கு ஆண்டுகளில் 33 சதவீதம் உயர்ந்து, 2019-20ஆம் ஆண்டு 64515 ஆக அதிகரித்தது.

2017-18ஆம் ஆண்டிலிருந்து 2019-2020ஆம் ஆண்டு வரை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினால் பயனடைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x