

கரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு பகிர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கெனவே 2 முறை கூடி விவாதித்தது. இன்று 3-வது முறையாக விவாதிக்க உள்ளது.
பெரும்பாலான பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள், மத்திய அரசு வழங்கிய கடன் வாங்கும் வசதியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கான வருவாய் இழப்பீடு பகிர்வு குறித்து விவாதிக்க அமைச்சர் குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இன்று நடக்க உள்ள கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்க உள்ளனர்.மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு ரூ.2.35 லட்சம் கோடியாகும். மத்திய அரசால் இதை வழங்க முடியாததால் மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.97 ஆயிரம் கோடி கடன் வாங்குவது அல்லது சந்தையில் இருந்து ரூ.2.35 லட்சம் கோடி கடன் வாங்குவது என 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.