Published : 11 Oct 2020 07:04 AM
Last Updated : 11 Oct 2020 07:04 AM

வங்கிக் கடன் விவகாரத்தில் வட்டி மீதான வட்டி சலுகை: ரியல் எஸ்டேட் துறைக்கு இல்லை மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி

வங்கிக் கடன் விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டுமே வட்டி மீதான வட்டிச் சலுகை அளிக்க முடியும். புதிதாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் தனி நபர் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன், நுகர் வோர் கடன் உள்ளிட்டவற்றுக்கு 6 மாத சலுகை அளிக்கப்பட்டது. இந்த கால கட்டத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, 6 மாத காலத்துக்கு வட்டி மீதான வட்டி சலுகையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.2 கோடிக்கும் குறைவான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களின் கடனுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அரசு தெரி வித்திருந்தது.

உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட் துறை உள் ளிட்ட பிற தொழில்கள் நலிவடைந்து இருப்பதாகவும் இந்தச் சலுகையை தங்கள் துறைக்கும் நீட்டிக்க வேண் டும் என்றும் பல்வேறு துறைகள் கோரிக்கை விடுத்தன. இத்துறை களுக்கும் சலுகை நீட்டிக்கப்படுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே அறிவித்தபடி ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்க முடியும். இந்த வரம்பை உயர்த்த இயலாது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த சலுகையை விரிவுபடுத்துவது சாத்தியமில்லை. விரிவான ஆலோ சனைக்குப் பிறகே ரூ.2 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயச் சூழலும் உள்ளதால் இதை அதிகரிக்க இயலாது.

வட்டி மீதான வட்டி காரணமாக பாதிக்கப்படும் துறைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இத்துறை களில் ஏற்பட்ட பாதிப்பு, சம்பந்தப்பட்ட கடனாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவை பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட துறைகளுக்கு சலுகை அவசியம் என்பதால் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு இந்தச் சலுகை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ரூ.21.70 லட்சம் கோடி

இதுதவிர, பெரிய நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் மறுவரையறை செய்வது தொடர்பாக ஏற்கெனவே ரூ.21.70 லட்சம் கோடியில் கரிப் கல் யாண் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர் பான சலுகைகள் குறித்த அறிவிக்கை, நோட்டீஸ் ஆகியன இதுவரை வெளி யிடப்படவில்லை. மிக அதிக அளவிலான தொகை தொடர்புடை யது என்பதால் இது சார்ந்த நட வடிக்கைகள் தீவிர ஆய்வுக்குப் பிறகு படிப்படியாக மேற்கொள் ளப்பட்டுள்ளன. இதற்குரிய கட்டாய நடைமுறைகள், தேவையான விதிமுறைகள் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகும்.

இந்த நடவடிக்கைகள் அனைத் தும் செலவு நிதிக் குழுவின் பரி சீலனையில் உள்ளன. இக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு இதுதொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படும். நாடாளுமன்றத்தின் செலவுக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற பிறகு வெளியாகும். ஏனெனில் இது பட்ஜெட் ஒதுக்கீடுகளை மிஞ்சிய செலவினமாகும்.

இவ்வாறு நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி சலுகை நீட்டிப்பு இல்லை

இதற்கிடையே, அனைத்து வகை கடன்களுக்கான வட்டி சலுகையை 6 மாதத்துக்குமேல் நீட்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி உறுதிபடத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x