சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த முடியாமல் தவிப்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த முடியாமல் தவிப்பு
Updated on
1 min read

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஐந்தில் ஒன்று தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) நடத்திய ஆய்வில் 30-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டமைப்பில் இருந்து 17,500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆய்வில் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டு விற்பனையில் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மட்டுமே விற்பனை ஆவதாக தெரிவித்துள்ளன.

பெரும்பாலான நிறுவனங்களுக்கு நிதிப் பிரச்சினை இருப்பதாகவும், ஆர்டர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளன. இதனால் இந்த நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனைச் செலுத்த பெரிதும் சிரமப்பட்டு வருகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஐந்தில் ஒரு நிறுவனம் செப்டம்பர் மாத கடன் தவணையைச் செலுத்தவில்லை. கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் வழங்கி வந்த கடன் தவணை ஒத்திவைப்பு வசதி ஆகஸ்ட் 31 உடன் முடிவடைந்தது. செப்டம்பர் மாதம் முதல் கடன் தவணை செலுத்த வேண்டும். இந்நிலையில் 62 சதவீத நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்தியுள்ளன. மேலும் 17 சதவீத நிறுவனங்கள் இசிஎஸ் அல்லது காசோலை மூலமாக தவணைகளைச் செலுத்தியுள்ளன. மற்ற நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்த முடியவில்லை.

வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போனஸ், ஊதியத்தில் முன்பணம் போன்றவை அதிகரிக்க உள்ளதால் நிறுவனங்கள் தங்களின் கடன் தவணைகளைச் செலுத்துவதில் என்ன நிலை உருவாகும் என்பது தெரியவில்லை என்று சிஐஏ ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in