

போர்ப்ஸ் இதழின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்த ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு 73 சதவீதம் உயர்ந்து ரூ.6.5 லட்சம் கோடியாக உள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் மைனஸ் 23 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தையின் வளர்ச்சி கூட முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வீழ்ச்சி காலத்திலும் போர்ப்ஸ் இதழின் முதல் 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் சரிபாதி பணக்காரர்களின் சொத்து மதிப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
முன்னணி 100 இந்தியப் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மொத்த சொத்து வளர்ச்சியில் முகேஷ் அம்பானி மட்டுமே 50 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறார்.
பங்கு விலையேற்றம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கரோனா ஊரடங்கு தொடங்கிய பிறகு ஏற்றம் காணத் தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோவின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்க்யூ இன்வெஸ்டார்ஸ் மூலம் ரூ.1.46 லட்சம் கோடி முதலீடு பெற்றுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். ஏற்கெனவே இதில் ரூ.36 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து 2-ம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 61 சதவீதம் உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடியாக உள்ளது.
ஹெச்சிஎல் நிறுவன தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார் விலகியதை அடுத்து அவரது மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மூன்று இடங்கள் முன்னேறி 3-ம் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.1.49 லட்சம் கோடியாக உள்ளது.
அவென்யு சூப்பர்மார்ட்டின் ராதாகிஷண் தமானி மூன்று இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி ஆகும்.