

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான டொயோடா, உபயோகப்படுத்திய பழைய கார்களை ஏல முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஏல முறையில் கார்களை விற்பனை செய்யும் முறையை முதன் முறையாக இந்தியாவில் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) என்ற பெயரில் செயல்படுகிறது. பெங்களூரில் செயல்படும் இந்நிறுவனம் பழைய கார்களை விற்பனை செய்வதற்கென்று தனி ஏல பிரிவை பிடாடி ஆலையில் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் பழைய கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் முறைசாரா தொழில் நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன. இப்போது பழைய கார்களை விற்பனை செய்வதற்கென தனி பிரிவை தொடங்கியதன் மூலம் இந்த பிரிவில் வெளிப்படையான, நம்பகத்தன்மையான நிலையை உருவாக்க முடியும் என்று நம்புவதாக டிகேஎம் நிறுவன நிர்வாக இயக்குநர் நயோமி இஷி கூறினார்.
டொயோடா நிறுவனம் ஏல முறையில் உபயோகப்படுத்திய கார் விற்பனையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் பிற நாடுகளில் செயல்படுத்தி வரும் இந்த முறையை தற்போது இந்தியாவிலும் செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பழைய கார்கள் அனைத்தும் உரிய வகையில் பரிசோதனை செய்யப்பட்டு தரம், உழைக்கும் தன்மை, நம்பகத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும். மொத்தம் 203 வகையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். சர்வதேச அளவில் டொயோடா நிறுவனம் இத்தகைய 203 விதமான சோதனைகளை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்புவதாக இஷி குறிப்பிட்டார்.
தற்போது செயல்படும் டொயோடா ஆக் ஷன் மார்ட் நிறுவனமானது நிறுவனங்களுக்கு விற்பனை (பி2பி) செய்யும் வகையில் செயல்படுகிறது. இனி தனி நபர்களுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.