

இணையதள வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனம் மைன்ட்ரா நிறுவனத்தை வாங்கியுள்ளது. மைன்ட்ரா நிறுவனமும் இணையதளம் மூலம் ஃபேஷன் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமாகும்.
இரண்டு நிறுவனங்களுமே தனியார் துறையால் நிர்வகிக்கப்படுவதால் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது அல்லது விற்கப்பட்டது என்ற விவரத்தை வெளியிட விரும்ப வில்லை என்று ஃபிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார்.
இருப்பினும் ஃபிளிப்கார்ட் சுமார் 30 கோடி டாலருக்கு (ரூ. 1,740 கோடி) மைன்ட்ரா நிறுவனத்தை வாங்கியிருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். மைன்ட்ரா நிறுவனத்தை முற்றிலுமாக ஃபிளிப்கார்ட் கையகப்படுத்தியுள்ளது.
மைன்ட்ரா நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் ஃபேஷன் வர்த்தகத்தில் தனது இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டுள்ளது ஃபிளிப்கார்ட். இதன் மூலம் அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங் களுக்குக் கடும் போட்டியாகத் திகழ முடியும் என்று கருதுகிறது.
மைன்ட்ரா நிறுவனத்தை ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியபோதிலும் அது தனியாகவே செயல்படும். மைன்ட்ரா நிறுவன நிர்வாகி முகேஷ் பன்சால் ஃபிளிப்கார்ட் இயக்குநர் குழுவில் சேர்ந்து ஃபேஷன் வர்த்தகப் பிரிவை கவனிப்பார்.
இரு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்ததன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அளவில் தரமான பொருள்கள் ஆன்லைன் மூலம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் எதிர்கால ஃபேஷன் உலகமே இணையதள வர்த்தகம் மூலம்தான் நடைபெற உள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்தது இந்த வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று ஃபிளிப்கார்ட் நிறுவனர் சஞ்சய் பன்சால் தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் இந்நிறு வனத்தில் ரூ. 600 கோடியை முதலீடு செய்யப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இ-காமர்ஸ் வர்த்தகத்தில் மிகச் சிறந்த பிராண்டாக உருவெடுத்துள்ள மைன்ட்ரா, ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய கண்டத்தில் அடுத்த தலைமுறையினருக்கு ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த கூட்டணி உதவும் என்று பன்சால் தெரிவித்தார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் 70 பிரிவுகளை 1.5 கோடி பொருள் களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் பதிவு பெற்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 1.80 கோடியாகும். இந்நிறுவன இணையதளம் தினசரி 35 லட்சம் `ஹிட்’களை தொடுகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனம்
2007-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. பின்னர் அனைத்துப் பொருள் களையும் விற்பனை செய்யத் தொடங்கியது. ஃபேஷன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள் விற்பனையையும் இந்நிறுவனம் தொடங்கியது. வாஷிங் மெஷின், ரெபரிஜிரேட்டர் உள்ளிட்ட வொயிட் குட்ஸ் மற்றும் பர்னிச்சர் விற்பனையிலும் அது ஈடுபட்டு வருகிறது. மாதந்தோறும் 50 லட்சம் பொருள்கள் வாடிக்கையாளர் களிடம் சேர்க்கப்படுகின்றன.
நாடு முழுவதும் 3 ஆயிரம் விற்பனை யாளர்கள் மற்றும் 10 ஆயிரம் பணியாளர்களுடன் மைன்ட்ரா நிர்வகிக்கப்படுவதாக அதன் மற்றொரு நிர்வாகி அசுதோஷ் லவானியா தெரிவித்துள்ளார். மைன்ட்ரா நிறுவனம் நைக் ஷூ உள்ளிட்ட 650 பிரபல பிராண்டு களை விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டு இந்நிறுவன வருமானம் ரூ. 1,000 கோடியாகும்.
இணையதள உபயோகம் அதிகரித்து வரும் அதேநிலையில் ஆன்லைன் மூலமான வர்த்தகமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ. 6,100 கோடியாகும்.
ஃபிளிப்கார்ட் நிறுவனம் சந்தை முறையிலான வர்த்தக அணுகுமுறையைக் கடைப் பிடிக்கிறது. இதன்படி தயாரிப்பா ளர்களே தங்களது தயாரிப்புகளை ஃபிளிப்கார்ட் நிறுவன இணைய தளத்தில் போட்டு விற்பனை செய்யும் வசதியையும் இது அளிக்கிறது.
இந்நிறுவனம் தொடங்கப் பட்டதிலிருந்து இதுவரை 50 கோடி டாலரை முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 36 கோடி டாலரை தனியார் நிறுவனம் மூலம் திரட்டியது.