

தொடர்ந்து 6 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்த நாட்டின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதம் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி 5.27 சதவீதம் உயர்ந்து மொத்த வர்த்தகம் 2,740 கோடி டாலரை எட்டியுள்ளது.
ஆயத்த ஆடைகள், இன்ஜினீயரிங் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள், பார்மாசூட்டிகல்ஸ், தரை விரிப்புகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார சூழல் இன்னமும் ஏற்றமடையாத சூழலில் தற்போது இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாது என்று சில ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து இந்திய தயாரிப்புகளை வாங்க விரும்பும் பிற நாட்டினருக்கு அரசு சலுகை தொடரும் பட்சத்தில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கும் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, தோல் பொருட்கள், கடல் உணவு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேசமயம், இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.6 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 3,769 கோடி டாலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது (2020 செப்டம்பர்) 3,031 கோடி டாலருக்கு பொருட்கள் இறக்குமதியாகி உள்ளன.
தற்போது வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்து 291 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை 75.06 சதவீதம் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு செப்டம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 1,167 கோடி டாலராக இருந்தது.
தானியங்கள், இரும்புத் தாது, அரிசி, எண்ணெய் வித்துகள், இறைச்சி, பால் சார்ந்த பொருட்கள், கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் வெள்ளி, கச்சா பருத்தி மற்றும் கழிவு, செய்தித்தாள், தங்கம், போக்குவரத்து சாதனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12,506 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீத சரிவை சந்தித்துள்ளது. அதேபோல இறக்குமதி 14,869 கோடி டாலராகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சரிவு 40 சதவீதமாகும்.
நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் இருந்தே ஏற்றுமதி வருமானம் சரிவைச் சந்தித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அது ஏற்றுமதி வருவாயை வெகுவாக பாதித்துள்ளது.