

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பி உள்ளதாக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் சரத்குமார் சரஃப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
ஊரடங்கு காரணமாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 12.66 என்ற அளவுக்கு குறைந்தது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், தொழில்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்து வரும் மாதங்களில் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் எனத்தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 ஏற்றுமதி பொருட்களில் 14 பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள், சணல் பொருட்கள், சில விவசாய உற்பத்திப் பொருட்கள், பால் மற்றும் இறைச்சி உணவுகள், இரும்புத் தாதுக்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
மேலும், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். இதன் மூலம், வியட்நாம், வங்கதேசம், மலேசியா போன்ற சிறிய நாடுகளின் வர்த்தகப் போட்டிகளை சமாளிக்க முடியும்.
அத்துடன், ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் சரஃப் தெரிவித்து உள்ளார்.