Published : 25 Sep 2020 12:42 PM
Last Updated : 25 Sep 2020 12:42 PM

670 மின்சார பேருந்துகள்; 241 சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல்: திருச்சியில் 25 நிலையங்கள் அமைகிறது

புதுடெல்லி

ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திருச்சியில் 25 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார போக்குவரத்துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 சார்ஜிங் நிலையங்களுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதை தனது ட்விட்டர் பதிவுகளில் அறிவித்துள்ள மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத போக்குவரத்துக்கான பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தை சார்ந்து இந்த நடவடிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 240 மின் பேருந்துகளில் MSRTCயின் இன்டர்சிட்டி மற்றும் நவி மும்பை மாநகர போக்குவரத்துக்கு தலா 100 பேருந்துகளும், பெஸ்ட் மும்பைக்கு 40 பேருந்துகளும் வழங்கப்படும்.

கோவா கடம்பா போக்குவரத்து கழகத்துக்கு 100 மின் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா உள்ளூர் போக்குவரத்துக்கான, சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த இ-பேருந்துகள் சுற்றுச்சூழலலையும், போக்குவரத்தையும் மேம்படுத்தும்.

குஜராத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 250 மின் பேருந்துகளில் 150 சூரத் மாநகராட்சிக்கும், 100 ராஜ்கோட் ராஜ்பாத் லிமிட்டெடுக்கும் வழங்கப்படும். இதைத் தவிர குஜராத்தில் 50 சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கு சார்ஜிங் நிலையங்களை அமைப்பது முக்கியமான உள்கட்டமைப்பு தேவையாகும். அந்த வகையில் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் 26 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று திரு ஜவடேகர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கும் 80 மின் பேருந்துகள் ஃபேம் இந்தியா திட்ட இரணடாவது கட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் 25 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொல்லத்தில் 25 , திருவனந்தபுரத்தில் 27, மலப்புரத்தில் 28, போர்ட் பிளேரில் 10 சார்ஜ் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x