Published : 24 Sep 2020 11:17 AM
Last Updated : 24 Sep 2020 11:17 AM

கிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்

புதுடெல்லி

கிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் தொழில்முனைவோர் கல்வி மூலம் நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், நிதியதவிக்கு தேவையான தொடர்பு போன்றவற்றை ஏற்படுத்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மூலமாக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதலாம் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக பூரி, வாரணாசி, ஹரித்துவார், கொல்லூர், பந்தர்பூர் மற்றும் புத்த கயா ஆகிய 6 கோயில் நகரங்களில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் திட்டங்களை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், ஜெர்மனியின் ‘டெட்சே ஜிஸ்’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘பெண் தொழில்முனைவோரின் பொருளாதார மேம்பாடு மற்றும் பெண்களால் தொடங்கப்படும் புதிய நிறுவனங்கள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அசாம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் பெண் தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் முன்னணி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் யுவா உத்யமிதா விகாஸ் என்ற மற்றொரு முன்னணி திட்டத்தை மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதன்மூலம் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மூலம் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஊரக சுய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயிற்சி பெறுபவர்கள் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 566 மாவட்டங்களில் 585 பயிற்சி மையங்கள் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை உட்பட 23 முன்னணி வங்கிகள் இணைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x